சோழிங்கநல்லூர்: நாடு முழுவதும் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக ஒன்றிய சாலை போக்கவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பெரு நகரங்களில் சாலை விபத்து, உயிரிழப்புகளை குறைப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னை நகரில் கடந்த ஆண்டு 3,452 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளது. முந்தைய 2021ம் ஆண்டை 5,034 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1,582 விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதே போல, விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதிலும் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது. 2021ல் சென்னையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 998 பேர் பலியான நிலையில், 2022ல் இந்த எண்ணிக்கை 507 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலமும் கடந்த ஆண்டில் 491 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பொறுத்த வரையில், சாலை விபத்துகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 312 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 491 உயிர்கள் பலியாகி உள்ளன. 4 லட்சத்து 43 ஆயிரத்து 366 பேர் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள் நிகழ்ந்து அதன் மூலம் 19 பேர் இறந்துள்ளனர்.
சாலை விபத்தில் இறந்தவர்களில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 66.5 சதவீதம் பேர் ஆவர். 18 முதல் 60 வயதுடைய பணிபுரியும் வயதினர் 83.4 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர். மொத்த விபத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 997 விபத்துகள் தேசிய நெடுஞ்சாலையிலும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 682 விபத்துகள் மாநில நெடுஞ்சாலையிலும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 633 விபத்துகள் மற்ற சாலைகளிலும் பதிவாகி உள்ளன. தொடர்ந்து 2வது ஆண்டாக அதிக விபத்தில் இரு சக்கர வாகனங்கள் முதலிடத்தில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் (64,105) பதிவாகி உள்ளன. அதேசமயம், சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் (22,595 பேர் பலி) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (17,884) 2வது இடத்தில் உள்ளது.
பெரு நகரங்களில் சாலை விபத்து
நகரங்கள் 2021 2022 குறைப்பு சதவீதம்
சென்னை 5,034 3,452 1,582 -31.4
விசாகப்பட்டினம் 2,339 1,531 808 -34.5
மும்பை 2,230 1,895 335 -15.0
பாட்னா 384 275 109 -28.4
சூரத் 704 683 21 -3.0
பெரு நகரங்களில் உயிரிழப்புகள்
நகரங்கள் 2021 2022 குறைப்பு சதவீதம்
சென்னை 998 507 -491 49.00
காஜியாபாத் 395 363 -32 8.10
லூதியான 380 364 -16 4.21
மீரட் 361 345 -16 4.43
மும்பை 387 371 -16 4.13
* ஹெல்மெட் அணியாததால் 50,000 பேர் பலி
நாடு முழுவதும் அதிவேக பயணமே பல உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்துள்ளது. அதிக வேகத்தால்தான் 72.3 சதவீத சாலை விபத்துகள், 71.2 சதவீத உயிரிழப்புகள், 72.8 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாததால் 50,029 பேர் பலியாகி உள்ளனர். காரில் சீட் பெல்ட் அணியாததால் 16,715 பேர் பலியாகி உள்ளனர். இது ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்டி உள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னல் மீறுதல் மற்றும் மொபைல் போனில் பேசியபடி செல்தல் ஆகியவை மொத்த விபத்துக்களில் 7.4 சதவீதம் மற்றும் மொத்த இறப்புகளில் 8.3 சதவீதம் பதிவாகி உள்ளது. 2024ல் சாலை விபத்தால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டுமென ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இலக்கு நிர்ணயித்துள்ளார்.