திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்மயா (17). இவர் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 3ம்தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மறுநாள் (4ம்தேதி) போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்மயாவை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம்தேதி கோட்கூர் அருகே அனந்தபுரம்-பெல்லாரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். சடலமாக கிடந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத வகையில் எரிக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் தீக்காயங்கள் இருந்தது. அவர் மீது ஆசிட் ஊற்றி கொன்று எரித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து சடலமாக கிடந்த பெண் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் தன்மயாவின் பெற்றோரை வரவழைத்தனர். அவர்கள் சடலமாக கிடப்பது தங்களது மகள்தான் என கூறியபடி கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தன்மாயவின் பெற்றோர், போலீசாரிடம் கூறுகையில், ராயதுர்கம், அனந்தபூர், பெர்ரர் நகரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்மயாவுடன் நண்பர்களாக பழகினர். இவர்களில் ஒருவர் தன்மயாவை காதலிக்கும்படி கூறி துன்புறுத்தினார். இதை ேபாலீசில் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கதறி அழுதனர். தன்மயா கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.