திமுக ஆட்சிக்கு வந்ததும், விடியல் பயணத் திட்டம், கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4,000ம் வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம் என 5 திட்டங்களுக்கு முதல் கையெழுத்தை மு.க.ஸ்டாலின் போட்டார். தொடர்ந்து ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகங்கள், போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை என அறிவிக்கப்பட்டது. ஆசிய அளவிலேயே பெரியதாக மதுரையில் ரூ.114 கோடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை முதன்முறையாக அறிமுகமானது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குள் நகைக்கடன் பெற்று நிலுவையில் இருந்த ரூ.4818.88 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.2755.99 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடியானது. சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லாத இலவச பேருந்து சேவை என்பது ஏழை பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இது போன்று இன்னும் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது அனைத்து அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 539 குழந்தைகள் பயனடைகின்றனர். அந்த வரிசையில் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தொடங்கப்பட்டது. இது பெண்கள் மத்தியில் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 2024-25ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.13 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்த மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயனடையும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்களின் போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. கடந்த மாதம் வரை 1 கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெறும் நிலையில் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை நேற்று வழங்கப்பட்டது. விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கிடைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதனால் இந்த அரசு சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் சாதனை அரசாக செயல்படுகிறது.