புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருக்கமானவர் என்று அறியப்பட்ட பிரேம் பிரகாஷ் என்பவர், சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்ப்ட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கலாம் என்ற பொதுவான சட்ட விதி உள்ளது. இது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். குறிப்பாக, சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளிலும் ஜாமீன் வழங்குவது என்பது விதி ஆகும். அதேநேரத்தில் சிறை என்பது விதிவிலக்கு ஆகும். மேலும் தனி மனித சுதந்திரம் என்பது எப்போதுமே ஒரே விதி ஆகும். அதனை சட்ட நடைமுறையின் மூலம் பறிப்பது விதி விலக்கானது. அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.
குறிப்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதற்கான நடைமுறை என்பது கடுமையாக இருப்பது என்பது கொள்கையை மீறியதாகும். அதேப்போன்று சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணை அலுவலகத்தில் வைத்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஒருவர் அளித்த வாக்குமூலங்கள் ஏற்கப்படாது. இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 25ன் கீழ் தடை அது விதிக்கப்பட்டது. மேலும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேம் பிரகாஷ் என்ற நபர் இந்த வழக்கு விவகாரத்தில் பிரதானமானவர் ஒன்றும் கிடையாது. மேலும் அவர் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு கிடையாது. அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்ட இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகள் அதிகம் பேர் உள்ளதால், விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. மேலும் அதனை முடிக்கவும் நீண்ட காலம் ஆகும் என்று தெளிவாக தெரிகிறது. அதுவரையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த வழக்கு விவகாரத்தில் பிரேம் பிரகாசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்குகிறது. அவர் அதிகாரிகள் அழைக்கும் போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.