மதுரை: மடப்புரம் காவலாளி இறப்பு வழக்கில், புகார்தாரரான நிகிதா மீது அடுத்தடுத்து ஏராளமான மோசடி புகார்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிகிதா (48). பேராசிரியையான இவர், தனது தாயார் சிவகாமியுடன் (73) சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்தபோது, காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை திருடப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இவரது புகாரின்பேரில்தான் தனிப்படை போலீசார், கோயில் ஊழியர் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு இருப்பதும், அஜித்குமார் மீது அவர் கொடுத்த புகார் பொய்யானது என்றும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. இது இவ்வழக்கு விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியையான நிகிதா, கடந்த 2010ம் ஆண்டில் தனக்கு அரசியலில் முக்கிய பிரமுகர்களை தெரியும்; அவர்கள் மூலம் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தரமுடியும் எனக் கூறி பலரிடம் வசூலில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் பச்சக்கோப்பன்பட்டியைச் சேர்ந்த பலரிடம் ரூ.16 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதும், யாருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் தலைமறைவாகியுள்ளார். தேடி கண்டுபிடித்து பணத்தை கேட்டவர்களை மிரட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பணத்தைக் கொடுத்து பாதிக்கப்பட்ட ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் உள்ளிட்டோர், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இவர்களது புகாரின்பேரில் கடந்த 2011ம் ஆண்டு நிகிதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால், இவரது தற்போதைய புகாரின் உண்மைத்தன்மையை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்துள்ளது. இது அஜித்குமார் இறப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருமங்கலம் காவல்நிலையத்தில் இன்று ஏராளமானோர் வந்து நிகிதாவிற்கு எதிராக புகார் அளித்தனர்.
திருமங்கலம் அருகேயுள்ள பச்சகோப்பன்பட்டியைச் சேர்ந்த தெய்வம் என்பவரிடம் 16 லட்சம் வசூலித்ததாகவும், தேனி கள்ளிப்பட்டியையைச் சேர்ந்த செல்வம் மற்றும் வினோத்திடம் 25 லட்சம், விஏஓ வேலை வாங்கித் தருவதாக முருகேசன் என்பவரிடம் பல லட்சமும் வசூலித்து மோசடி செய்துள்ளார். இதேபோல் மற்றொருவரிடம் சத்துணவு பொறுப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 லட்சம் வசூலித்துள்ளார். பணம் வாங்கிய யாருக்கும் வேலையும் வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார். பாசில் என்பவரிடம் வீட்டடி மனை வாங்கித் தருவதாக கூறி 75 லட்சம் வசூலித்த நிலையில் ரூ.20 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் நிகிதாவிற்கு பல நூறு ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அவற்றை பறிமுதல் செய்து மோசடி செய்த பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
நிகிதாவின் தந்தை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால் நிகிதாவுக்கு, பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து பிரிந்து அதே பெயரில் கட்சித் தொடங்கியுள்ளவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லித்தான் திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தவுடன் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. இதனால் 28 நாளில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்தநிலையில், நிகிதாவுக்கு பல விஐபிக்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பல ஐஏஎஸ்களையும் அவருக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது. அதோடு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபரையும் தெரியும் என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் மூலம் புகாரே கொடுக்காமல்தான் இந்த அரஜாகத்தை போலீசார் அரங்கேற்றியுள்ளனர். காரை நிறுத்தும்போது கார் பார்க்கிங்கிற்கு ரூ.500 வேண்டும் என்று காவலாளி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் நிகிதாவை, அஜித்குமார் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நகையே தொலையாமல், நகையைக் காணவில்லை என்று பொய்யான புகாரை கொடுத்து அஜித்குமாரை தாக்க வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட எஸ்பிக்கே தெரியாமல், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதால், இதனால் முக்கியமானவராக பார்க்கப்படுவது மானாமதுரை டிஎஸ்பியைத்தான். இதனால் இந்த விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.