சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்துகள் சேர்த்ததாக 2015ல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடவரதன் முன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் ஜூன் 23ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இவ்வழக்கில் நேற்று ஆ.ராசா ஆஜரானார். அப்போது அவர், குற்றச்சாட்டு பதிவு செய்தற்கு முன் வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இவ்வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது தள்ளிவைக்கப்பட்டது. வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.