சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும். இன்று தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், திருத்தணியில் தலா 13 செ.மீ., மழை பெய்துள்ளது. மரக்காணம், கஞ்சனூர், உத்திரமேரூரில் தலா 8 செ.மீ, பூண்டி, கத்திவாக்கம், திருவள்ளூர், திருவாலங்காடு, ராணிப்பேட்டையில் தலா 7 செ. மீ.,் மழை பெய்துள்ளது.