* சிறப்பு செய்தி
இயலாத சிலருக்கு உறுப்புகளை தானமாக வழங்கும் உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வரம். ஒருவர் வாழ்வதற்கு தேவையான முக்கியமான உறுப்பு செயலிழந்து விடுகிறது. அந்தச்சூழலில் வேறொருவரின் உறுப்பை பொருத்தி புதியவாழ்வை அளிக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானத்தில் போற்றப்பட வேண்டிய சாதனை. நெருங்கிய ஒருவரின் மரணம் என்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அந்த நேரத்தில் ஒருவர் தனது உறுப்புகளை தானமாக தருவதற்கு முன்வந்து, முகம் அறியா உயிர்களை காப்பாற்றுகிறார் என்றால் அதைவிட பெரும் கருணையென்று இந்த உலகத்தில் ஒன்றுமில்லை என்கின்றனர் மனிதநேய மருத்துவ நிபுணர்கள்.
உடல் உறுப்புகள் செயல் இழந்து போவதாலும், வேறு ஒருவரின் உறுப்புகள் தானமாக கிடைக்காததாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இறக்கின்றனர். தேவைப்படும் நபர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உடல்உறுப்புகள் தானமாக கிடைக்கிறது. மீதமுள்ள 90 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சிறுநீரக தானத்திற்கு காத்திருக்கின்றனர். ஆனால் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே சிறுநீரகம் தானமாக கிடைக்கிறது. இதேபோல் 80 ஆயிரம் பேருக்கு கல்லீரல் தேவைப்படும் நிலையில் 1,800 பேருக்கு மட்டுமே கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதயநோயாளிகள் 10 ஆயிரம் பேரில் 200 பேருக்கு மட்டுமே மாற்று இதயம் தானமாக கிடைக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு முறை புதிய பெயர் தேசிய மாற்று உறுப்பு காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி அறிக்கைகளின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தீவிர தேவையால் ஒவ்வொரு நாளும் 20 நோயாளிகள் இறக்கின்றனர். உலக புள்ளி விபரங்களின் அடிப்படையில் 199 நாடுகளில் நடக்கும் சாலை விபத்துகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால் ஏற்படும் மூளைச்சாவுகளும், இறப்புகளும் அதிகமாக உள்ளது. ஆனாலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இது குறித்த விழிப்புணர்வும் போதிய அளவில் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாகவே உறுப்புதானம் பெறுவதில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்திற்கான விருதையும் தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வருகிறது. தமிழகத்தில் 2008ம் ஆண்டுக்கு பிறகு 1705 பேர் உறுப்புதானம் செய்துள்ளனர். இவர்களிடம் பெறப்பட்ட உறுப்புகளால் 6,267 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் இதயம் 786 பேருக்கும், நுரையீரல் 801 பேருக்கும், கல்லீரல் 1565 பேருக்கும், சிறுநீரகம் 3046 பேருக்கும், கணையம் 37 பேருக்கும், சிறுகுடல் 6 பேருக்கும், வயிறு 2 பேருக்கும், கைககள் 4 பேருக்கும், மொத்த திசுக்கள் 3,946 பேருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவரது வழிகாட்டுதலின் பேரில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்கள் வழங்கிய உறுப்புகள் 1162 பேருக்கு பயன்பட்டுள்ளது. இந்த வகையில் உறுப்பு தானம் என்பது தமிழகத்தில் ஒரு தனிஇயக்கமாகவே செயல்பட்டு வருகிறது என்கின்றனர் அரசுத்துறை உயரதிகாரிகள்.
இதுகுறித்து உடல்தான விழிப்புணர்வு மேம்பாட்டு அமைப்புகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‘‘உடல்உறுப்பு தானத்தில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று உயிருடன் இருக்கும் போதே உறுப்புகளை தானம் செய்வதாகும். இந்தவகையில் சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி போன்றவற்றை தானம் செய்யலாம். இந்தவகையில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் உறுப்புகளை தானம் செய்யலாம். மற்றொன்று இறந்த பிறகு உறுப்புகளை தானம் செய்வதாகும். இறந்தவர்களின் உறுப்புகளை, அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலோடு தானமாக பெறலாம். இயற்கை மரணத்தின் போது கண்கள், இதயவால்வு, தோல், எலும்புகள் ஆகிவற்றை தானமாக பெறலாம். மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகள் அனைத்தையும் தானம் வழங்க முடியும். ஒருவர் உறுப்பு தானம் செய்யும் போது 6 பேரை காப்பாற்ற முடியும். அதிகபட்சமாக 75 பேர் வரை கூட காப்பாற்ற முடியும்,’’ என்றனர்.
* மனிதநேயமிக்க உன்னத அறம்
உறுப்பு தானம் செய்வதற்கான வயதுவரம்பு மாறுபடும். உயிருள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தால் 18வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அவரது உடல்நிலையும், சூழ்நிலையும் மிகவும் முக்கியமானது. இயற்கை மரணம் அல்லது உயிரிழந்தவர்கள் தங்களது உறுப்புகளை தானம் செய்ய வயது வரம்பு இல்லை. ஆனால் முழுமையான உடல்பரிசோதனை செய்த பின்னரே உறுப்பு தானம் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். இருக்கும் போது ரத்ததானம், இறந்த பிறகு கண்தானம், விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்டு விட்டால் உறுப்பு தானம் என்ற உணர்வு அனைவரது மனங்களிலும் வரவேண்டும். இதன்மூலம் புதைத்தும், எரித்தும் வீணாகும் உடல்உறுப்புகளை சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கு கொடையாக கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை பரவலாகும். இந்த உறுப்பு தானம் என்பது உன்னதமான அறம் மட்டுமல்ல, மதங்கள் கடந்து மனித நேயத்தையும் விதைத்து வளர்க்கிறது என்கின்றனர் இதற்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.
* ஒருவர் உறுப்பு தானம் செய்தால் அதிகபட்சமாக 75 பேர் வரை கூட காப்பாற்ற முடியும்
* மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழ்நாடு
மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் இந்த மகத்தான சேவையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாக 2008ம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞரின் உடல்உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தது மனங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை பெற்று மற்றவர்களுக்கு பொருத்தும் வகையில் ‘தமிழக அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை’ என்ற மாபெரும் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போதில் இருந்து தமிழகம் உறுப்புதானம் பெறுவதில் இந்தியாவில் முதலிடம் வகித்து மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
1.50 லட்சம் பேர் காத்திருப்பு; தினமும் 20 பேர் இறப்பு
* தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
* ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சிறுநீரக தானத்திற்கு காத்திருக்கின்றனர்.
* 80 ஆயிரம் பேருக்கு கல்லீரல் தேவைப்படுகிறது.
* 10 ஆயிரம் பேர் இதயம் தானத்துக்காக காத்திருக்கின்றனர்.
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தேவையால் ஒவ்வொரு நாளும் 20 நோயாளிகள் இறக்கின்றனர்.
* அரசு வழங்கிய தனி மரியாதை
உறுப்புதானம் செய்தவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு தேனி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த வருவாய் ஆய்வாளர் வடிவேல் (43) என்பவரது உடல்உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் முதல்நபராக அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவரும் மூளைச்சாவு அடைந்த நிலையில் உறவினர்கள் உறுப்புதானம் செய்தனர். அவரது உடலுக்கும் மருத்துவர்கள் வழிநெடுக மலர்தூவி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை
‘‘மனிதர்களின் ஒவ்வொரு உறுப்பும் பிற உயிர்களுக்கு தானமாக வழங்கலாம். இதற்கு வயது வரம்பு எதுவுமில்லை. சிறுநீரகங்கள், கல்லீரலை 70 வயது வரை தானம் செய்யலாம். இதயம், நுரையீரலை 50 வயதுகள் வரை தானம் செய்யலாம். கணையம், குடலை 60 முதல் 65 வயது வரை தானம் செய்யலாம். கார்னியா, தோல் போன்றவற்றை 100 வயதிலும் தானம் செய்யலாம். இதய வால்வுகளை 50 வயது வரை தானம் செய்யலாம். எலும்பை 70ஆண்டுகள்வரை தானம் செய்யலாம். அதே நேரத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் பல்லாண்டுகளாக தவறான புரிதல் உள்ளது. அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் அதேநேரத்தில் போதிய விழிப்புணர்வும் இல்லை. உறுப்புகள் தானமாக கிடைப்பதற்கு இது இரண்டும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது,’’ என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.