*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆறுமுகநேரி : தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், குலசை, மணப்பாடு, உவரி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும், கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், கூடங்குளம் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக தூத்துக்குடி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலையில் பழையகாயல், ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாகத் தான் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கனரக வாகனங்களில் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் முறையாக தார்பாய்கள் கொண்டு மூடாமல் வாகனத்தின் மேல் பகுதிக்கு மேல் வரை அதிக பாரத்துடன் கொண்டு செல்லப்படுகிறது. மின் கம்பிகளை தொட்டுக் கொண்டும், மரக்கிளைகளில் உரசியும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
இவ்வாறு சாலையில் வேகமாக செல்லும் போதும் முறையாக மூடப்படாத மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் சாலையோரம் நடந்து செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மீதும் விழுவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அதிக பாரத்துடன் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் விதிகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.