சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் சிறைபிடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதாக அறிந்தோம். சாலை விபத்து என்பது எதிர்பாராதவிதமாக நடைபெறும் ஒன்று. ஒரு விபத்து நிகழ்வதற்கு சாலை விதிகளை கடைபிடிக்காத சாலை பயனாளர்கள், கண் மறைவு பிரதேசங்கள், சாலைகள் போன்று பல காரணங்கள் உள்ளது.
ஒரு விபத்து நடந்தவுடன் அதனை புலனாய்வு செய்து சாட்சிகளை விசாரித்து அனைத்தையும் சரிபார்த்த பின்பு தான் குற்றவாளி யார் என்று உறுதிப்படுத்த முடியும். ஆனால் விபத்து நடந்த உடனே கனரக வாகனங்கள் மட்டுமே குற்றவாளிகள் என்று முடிவு செய்வது தவறான முன்னுதாரணமாகும். எனவே விபத்து நேரிட்டால் 100 நாட்கள் வரை பேருந்துகளை விடுவிக்க கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும்.
யாரும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்து விபத்து ஏற்படும்போது எங்கள் வாகனங்களை 100 நாட்கள் சிறை பிடித்தால் அந்த வாகனத்திற்கு சாலை வரியாக அரசுக்கு காலாண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.1.50லட்சம், பேருந்து மாதத்தவணை ரூ.2 லட்சம் மற்றும் ஒட்டுநர் சம்பளம் பணியாளர்கள் சம்பளம் என முழுமையான நிதிநெருக்கடியும் பயணிகள் சேவையிலும் பாதிப்பும் ஏற்படும். ஆகையால் மேற்கண்ட சட்டத்தை மீறிய உத்தரவை ரத்து செய்தும் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.