சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ZAD (Zero Accident Day) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகருக்குள் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்களின் சேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் நடத்தைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய போக்குவரத்து விதிமீறல்கள் ஆகிய இரண்டையும் நிவர்த்தி செய்கின்றனர். சென்னையில் உள்ள பெரும்பாலன மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக Ola, Uber மற்றும் Rapido போன்ற முக்கிய வாகன சேவைகள் இருந்து வருகின்றனர், இந்நிறுவனங்கள் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் மக்களின் தேவைக்கேற்ற கட்டண மதிப்பீட்டுடன் கூடிய பயணத்தினை வழங்குகிறது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் (GCTP) இன்றைய ZAD பிரச்சாரத்தின் மையமாக சென்னையில் உள்ள Cab / Taxi ஓட்டுநர்களின் நடத்தையை முன்னிலைப்படுத்தியது. இவர்கள் தங்கள் பயணிகளின் நேரத்தை எளிதாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செல்ல வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சில வாகன ஓட்டுநர்கள் வேக வரம்புகளை மீறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொது இடங்களில் வாகன நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்பு செய்தல் மற்றும் பிற வாகனங்களை முந்திச் செல்வதும் பொதுவாகக் காணப்படுகின்றன, இச்செயலானது பல்வேறு அபாயங்களை உருவாக்கும் நிலைக்கு வழிவகுக்கிறது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கூடுதலாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னல்களுக்கு மதிப்பளிக்காமல் செல்வதும், முறையற்ற பாதைகளில் செல்வதும் குறிப்பிடப்பட்டுள்ளன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளில், 2023 மற்றும் 2024, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் குறிப்பிடத்தக்க மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்துள்ளனர். இவற்றில், அனுமதிக்கப்படாத வழிகளில் செல்தல் (No Entry) மொத்த வழக்குகளில் 76 சதவீதமும், செல்போன் பேசிக்கொண்டு வாகன ஓட்டும் விதிமீறல்களில் 4 சதவீதமும் பதிவாகியுள்ளது, இச்செயலானது வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதற்கான சவாலை உருவாக்குகிறது.
அனுமதிக்கப்படாத மற்றும் நெரிசலான பகுதிகளில் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்து வைத்தலுக்கான விதிமீறல்களில் 15 சதவீதமும் உள்ளன என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இறுதியாக, சீட் பெல்ட் விதிமீறல்கள் மொத்தத்தில் 5% ஆகும், இது ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ZAD விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளையும் வலியுறுத்துவதற்காக, வாகன ஓட்டுநர்களுக்கு தகவல் பறிமாற்றம் செய்வதற்கு சிறப்பு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் Tr.R.சுதாகர், IPS., கூடுதல் காவல் ஆணையாளர், போக்குவரத்து அவர்கள் இன்று (14.08.2024), கீழ்பாக்கம், ஈ.வெ.ரா. சாலையிலுள்ள Eco Park வளாகத்தில் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு ZAD ஸ்டிக்கர்கள் வழங்கினார்.
இந்த ஸ்டிக்கர்கள் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பிரச்சாரத்தின் நோக்கங்கள் குறித்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சி நினைவூட்டலாக செயல்பட்டன. போக்குவரத்து விதிமுறைகளை முன்னுதாரணமாக கடைப்பிடித்த சிறந்த ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அனைத்து வாகன ஓட்டிகளும் வருகின்ற ஆகஸ்ட் 26, 2024 அன்று எந்தவொரு விபத்தும் ஏற்படாத வண்ணம் தங்களது பொறுப்புணர்ச்சியினை உணர்ந்து அனைவரும் சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டுமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுக்கின்றனர்.