மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று காலை கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 80 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சரக்கு ரயில் சரியான சிக்னலை கவனிக்காமல் முன்னேறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது சுதந்திர இந்தியாவின் மிகக் கொடூரமான ரயில் விபத்தாகும். ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சரும், தற்போதும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ், பதவி விலக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஆனால் அவரும், ஒன்றிய அரசும் கண்டுகொள்ளவில்லை. மாறாக இந்திய தண்டனை பிரிவு சட்டம் 304ன் கீழ் பாலசோர் ரயில் நிலைய மூத்த பொறியாளர் அருண்குமார், இளம் பொறியாளர் அமீர் கான், தொழில்நுட்பவியலாளர் பப்பூ குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விபத்தை முடித்து விட்டனர்.
1956ல் தெலங்கானா மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி பதவி விலக முன்வந்தார். எனினும் அப்போதைய பிரதமர் நேரு, அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார் என்பது வரலாறு ஆகும். ரயில்வேயில் கடுமையான ஆள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என, ரயில்வே வாரியமே ஒப்புக்கொண்டது.
அதன் பிறகும் ரயில்வே துறையில், பெரிய அதிகாரிகளின் பணியிடங்கள் உள்பட 3 லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜ, காலியிடங்களை நிரப்பவில்லை. 3வது முறையாக பாஜ கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சி.ஆர்.எஸ்) பரிந்துரைகளை ரயில்வே வாரியம் புறக்கணித்ததாக விமர்சித்திருக்கிறது. 8 முதல் 10 சதவிகித விபத்துகளை மட்டுமே சி.ஆர்.எஸ் விசாரிக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது.
சி.ஆர்.எஸ் ஏன் பலப்படுத்தப்படவில்லை. தண்டவாளங்கள் சோதனை செய்யப்படாமலேயே இருப்பதாகவும், பாதை புதுப்பித்தலில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் விபத்து இல்லாத ரயில்வே துறையை மேம்படுத்த வேண்டும். உயிர்ப்பலிக்கு ஒன்றிய அரசின் ரூ.2 லட்சம் நிவாரணம் என்பது தற்போதைய வாழ்க்கையில் சொற்ப பணம். இந்தியாவின் நீண்ட போக்குவரத்து துறை ரயில்வே. எனவே, விபத்தில் பலியான குடும்பத்துக்கு அதிக நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்கி அவர்களது குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.