திருப்போரூர்: திருப்போரூர் அருகே மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, பைக் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதியதில், பேரூராட்சி ஊழியர் தனது மனைவியுடன் பரிதாபமாக பலியானார். இதில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் கூலாகச் சென்ற பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகர் பகுதியில் வசிப்பவர் தாமோதரன் (50). இவர், மாமல்லபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் தங்கி, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இவரது, மனைவி ஜெயதுர்கா (45) மாமல்லபுரம் புனித மேரி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு மாடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசிக்கும் தங்களது மகள் வீட்டிற்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு திரும்பிவிடுவர். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் மாடம்பாக்கத்திற்குச் சென்று, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பைக்கில் மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
கேளம்பாக்கம் அருகே சோனலூர் என்ற இடத்தில் வனப்பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத பேருந்து, பைக்கின் பின்பக்கத்தில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அதிக போக்குவரத்து இல்லாததால் இருவரது சடலங்களும் சாலையிலேயே கிடந்துள்ளன. பின்னர் சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்றவர்கள் பார்த்துவிட்டு, இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் கார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக கேளம்பாக்கம் நோக்கி சென்ற பேருந்துதான், தம்பதி மீது மோதியுள்ளது தெரிய வந்தது.
அதிகாலை, இருட்டு நேரம் என்பதால் யாரும் பார்க்கவில்லை என்று கருதி ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். மேலும், விபத்து குறித்து எந்தவித சலனமும் இன்றி கேளம்பாக்கம் சென்று புதுப்பாக்கம் வரை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்.
இதனிடையே, போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த பேருந்து மட்டும்தான் அந்த நேரத்தில் கடந்து சென்றிருப்பது தெரியவந்தது.
விபத்து நடந்த இடத்தின் வழியாக மீண்டும் திரும்பி வந்த தனியார் கம்பெனி பேருந்தை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது ஓட்டுநர் கோட்டீஸ்வரன் உண்மையயை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொஞ்சம் கூட மனித நேயத்தோடு நடந்து கொள்ளாமல் சென்ற ஓட்டுநரை பலரும் திட்டி வருகின்றனர்.
* கிரகப்பிரவேஷம் நடப்பதற்குள் சோகம்
விபத்தில் இறந்த பேரூராட்சி ஊழியர் தாமோதரன், மாடப்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வந்தார். புதிய வீட்டின் கிரகப்பிரவேஷ விழாவை அடுத்த மாதம் 7ம்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று நடத்த முடிவு செய்து, அதற்கான அழைப்பிதழை தயார் செய்து நண்பர்கள், உறவினங்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார். இந்நிலையில், சொந்த வீட்டிற்கு குடிபோவதற்கு முன்பே, சாலை விபத்தில் மனைவியுடன் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.