சென்னை : சென்னை கொளத்தூர் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் இர்பான். இவரது மனைவி கவிதா (46). இவர் தனியார் வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம். கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி வங்கி அதிகாரியான கவிதா காரில் கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் கார் நிலைதடுமாறி சாலையின் சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார். விலா எலும்புகள் முதுகுதண்டு ஆகியவை கடும் சேதம் அடைந்தது. மருத்துவமனையில் சேர்த்தும் குணமடையவில்லை. தொடர்ந்து படுத்த படுக்கையானார். அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
இதையடுத்து இழப்பீடு கேட்டு கவிதா சேலம் மோட்டார் வாகன விபத்துகளுக்கான சிறப்பு சார்பு நீதிமன்றம் 2ல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது. இதில் இன்சூரன்ஸ் நிறுவனமும் கவிதா தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கவிதாவுக்கு ரூ.3கோடி இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கவிதா சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி ஆம்புலன்ஸ் உள்ளே சென்று ரூ.3 கோடிக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.