புதுடெல்லி: உச்சநீதி மன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் அதன் முழு பலத்தை எட்டி உள்ளது. தலைமை நீதிபதி உள்பட 34 பேரை கொண்ட உச்சநீதி மன்றத்தில் 3 பணியிடங்கள் காலியாக இருந்தன. காலி பணியிடங்களை நிரப்ப தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலிஜியம் டெல்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் மற்றும் கவுகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரது பெயர்களை கடந்த 6ம் தேதி பரிந்துரை செய்தது.
கொலீஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு நேற்று ஏற்று கொண்டது. இதையடுத்து 3 பேரும் உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்று கொண்டனர். உச்சநீதி மன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் 3 நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3 பேர் பதவி ஏற்றதால் உச்சநீதி மன்றம் முழு பலத்துடன் இயங்க உள்ளதால் வழக்கு விசாரணைகள் விரைந்து முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.