பொன்னேரி: சென்னை புறநகர் பகுதிகளில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் சிவகுமார்(53). எண்ணூர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர். கொள்ளை வழக்கில் இவரது கூட்டாளிகள் ஏற்கெனவே சிறையில் இருக்கின்றனர். சிவக்குமார் மட்டும் போலீசாரிடம் அகப்படாமல் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையர் சங்கரின் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், உதவி ஆணையர் ராஜா ராபர்ட் ஆலோசனைப்படி, செங்குன்றம் ஆய்வாளர் பெருந்துறை முருகன் தலைமையில் குற்றப் பிரிவு எஸ்.ஐ பழனிவேல், காவலர்கள் செந்தில், பிரபாகரன், மோகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சிவக்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இவர் சென்னை காசிமேடு பகுதியில் பதுங்கி இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, நேற்றுமுன்தினம் மாலை அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது ெசய்தனர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.