குவாலியர்: மபி மாநிலம் குவாலியர் கோட்டைக்குள் அமைந்துள்ள சிந்தியா பள்ளியின் 125வது நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 370வது பிரிவை ரத்து செய்தல், 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம்,ஜிஎஸ்டி, முத்தலாக் தடை சட்டம், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு நிறைவேற்றி அமல்படுத்தியது. பல ஆண்டுகளாக நாட்டில் புதிய ரயில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இப்போது நவீன வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களை எனது அரசு தான் அறிமுகப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
* அதிகாரிகளுக்கு 6 மாதம் கெடு
பாஜ அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் முழுமையாக மக்களை சென்று சேர்ந்துள்ளதா என்பதை 6 மாதங்களுக்குள் தெரிவிக்க பிரதமர் மோடி காலக்கெடு நிர்ணயித்துள்ளார். இதை அறிய, ‘விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற மெகா இயக்கத்தை தொடங்க உள்ளது. அதற்காக பிரத்யேகமாக ரதங்கள் உருவாக்கப்பட்டு, அவை நாடு முழுவதும் உள்ள 2.7 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு யாத்திரையாக செல்லும். அதில் அரசு திட்டங்களில் பயன் பெற்றவர்கள் குறித்து பதிவு செய்யப்படும். இந்த திட்டங்களின் பயனாளர்கள் குறித்த விவரங்களை 6 மாதங்களுக்குள் கண்டறிந்து அறிக்கை அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசியல் பிரசாரத்திற்கு எப்படி ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளது.