சென்னை: சென்னையில் நாளை பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பார்முலா-4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், பார்முலா-4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
இதை மறுத்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் அமைப்பு தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. பொது சாலையை மக்கள் அணுகும் உரிமையை தடுக்க முடியாது. பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தை ஆய்வு செய்து சர்வதேச அமைப்பான சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கவில்லை. இருங்காட்டுக்கோட்டையில் சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் பந்தயம் நடத்த எந்த எதிர்ப்பும் இல்லை.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை பந்தயத்துக்காக மூட முடியாது. பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் பந்தயத்தை எப்படி பொதுநலன் என்று கூற முடியும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்து தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கடந்த முறை கார் பந்தயத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது, ஒலி கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளுடன் பந்தயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் எந்த நிபந்தனையும் மீறப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது.
பந்தயம் நடத்தப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்படும். பந்தயத்துக்கு அரசு எந்த செலவும் செய்யவில்லை. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதே காரணத்துக்காக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதனால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. அதேபோல் இந்த பந்தயம் நடக்கும்போதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது என்று வாதிட்டார்.
இதையடுத்து, கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்குவரத்து சீராக இருக்க வேண்டும். மக்களுக்கு அசவுகரியம் இருக்க கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது எனக் கூறி இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான உத்தரவாதத்துடன் அரசு தரப்பில் மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அறிக்கை தாக்கல் செய்தார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாது. பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். போட்டி நடத்தும் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், சர்வதேச மோட்டார் கூட்டமைப்பின் அனுமதி சான்று போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் கிடைக்கும். அனுமதி சான்று கிடைக்கவில்லை என்றால் போட்டி நடத்தப்படாது என்றார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி கார் பந்தயம் நடத்தலாம். பந்தயம் நடக்கும்போது பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை, சென்னை மத்திய ரயில் நிலையம் ஆகியவற்றுக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. பந்தயம் நடத்துவதற்கான சர்வதேச மோட்டார் கூட்டமைப்பின் அனுமதி சான்றிதழை போட்டி நடைபெறுவதற்கு முன்பு மனுதாரரின் வழக்கறிஞருக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும். எந்த விதிமுறைகளும் மீறப்படாது என்று அரசு உத்தவாதம் தரவேண்டும். இந்த வழக்கு 6 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, போட்டியை நடத்தும் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.