Saturday, April 20, 2024
Home » அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

by Lavanya

ஒளிரும் கலா வயிரவி

பயிரவி! பஞ்சமி! பாசாங்‌குசைபஞ்ச பாணி! வஞ்சர்‌
உயிர்‌அவி உண்ணும்‌உயர்சண்டி! காளி! ஒளிரும்கலா
வயிரவி! மண்டலி! மாலினி! சூலி! வராகி – என்றே
செயிர்‌அவி நான்மறை சேர்‌திருநாமங்கள்‌செப்புவரே.
– எழுபத்தி ஏழாவது அந்தாதி

“அந்தமாக”

இப்பாடலானது பத்து வித்தைகளை உபதேசிக்கக்கூடிய தேவதையை குறிப்பிடுகிறது. இந்த தேவதை ஒவ்வொன்றிற்கும் தியான வடிவம், பூஜிக்கும் நெறி, காலம், மந்திரம், பூசனைக்குறிய பொருள் என்று தனித்தனியே தந்திர சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வித்யா என்பது பத்து விதமான தேவதைகளின் அருளினால் அடையப்படும், சிறப்பான ஆற்றல். உதாரணமாய், உலகியல் படிப்பில் தலைசிறந்தவராக ஆதல் எதிர்காலத்தை அறிதல் பிறர் மனதில் நினைத்ததை நினைத்தபடியே கூறுதல், பிறர் கண்ணுக்கு தோன்றாது மறைத்தல் இல்லாத ஒன்றை இருப்பது போல் தோற்றுவித்தல், உடலை பதினாறு கூறுகளாகப் பிரித்து பின் உடலை இணைத்தல் இறந்த உடலில் தன் உயிரை பாய்சுதல் உடலில் தோன்றும் வியாதியை போக்குதல், தீர்க்க முடியாத பிறவி ஊனம் போன்றவற்றை மாற்றுதல் என்று இவ்வாறாக சாதாரண மனிதர்களால் இயலாத இறையருள் சக்தியால் செய்யத்தக்க அற்புதச் செயலை, வித்யை என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

சக்தி தத்துவம் என்பது மனித முயற்சி, குருவின் உபதேசம், தேவதையின் அருள் இம்மூன்றையும் இணைப்பதால் தோன்றும் பேராற்றலையே “சக்தி” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதை, அனைத்து மனிதர்களும் பெறலாம் என்கிறது ஆகமம். மனிதன், கருவிலே உற்பத்தியானது முதல், கைலாசம் செல்வது வரை மனிதனுக்கு தேவையான அனைத்தையும்
வழிபாட்டால் சாதிக்கலாம்.

காலம், இடம், நிகழ்வு என்று புறச்சூழலுக்கு தக்கவாறு, வயது, பயிற்சி அறிவு, என்று அகசூழலுக்கு தக்கவாறு பல தேவைகள் இருக்கிறது. அவைகளை அடைவதில் பல இடையூறுகள் இருக்கிறது. அடைவதனால் பல நன்மையும் இருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் தக்கவாறு மனிதன் வாழும் போது தேவையான பதினொறு விதமான செல்வத்தையும், ஆன்மஞானத்தையும், இறந்தபின் முக்தியையும், அடைவிக்கும் வல்லமை உள்ள தேவதைகளை பத்தாக பிரிக்கிறது சாக்த தந்திரம். அந்தப் பத்து தேவதைகளின் பெயரைத் தான் இந்த பாடலின் மூலம் வரிசைப் படுத்தி இருக்கிறார். சாக்த கோட்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும்;

* கருவிலே நுழைந்த பத்து மாத காலம்.
* குழவி பருவம்.
* தாய்ப்பால் அருந்தும் காலம்.
* தவழும் பருவம்.
* நடக்கும் பருவம்.
* பால பருவம்.
* இளமைப் பருவம்.
* திருமணப் பருவம்.
* முது இளமைப் பருவம்.
* முதுமைப் பருவம்.

என்ற பத்து பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகளும் பிரச்னைகளும் உள்ளன. அதை தவிர்க்கும் வகையில் அருள்புரிய பத்து விதமான ஆற்றலுடைய தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகள் கருவில் உருவானது முதல் இறையோடு இரண்டறக் கலப்பது வரை உதவி புரியும், அதையே “பயிரவி! பஞ்சமி! பாசாங்‌குசைபஞ்ச பாணி! வஞ்சர்‌ உயிர்‌அவி உண்ணும்‌உயர்சண்டி! காளி! ஒளிரும்கலா வயிரவி! மண்டலி! மாலினி! சூலி! வராகி’’ என்று பத்து தேவதைகள் உள்ளன.

இவை ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும், ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும், ஒன்றுக்குள் ஒன்று அடங்குவதுமாகிற பண்பினை தன் இயல்பாகக் கொண்டது. இந்த பத்தையும், ஒரே சொல்லால் “தசமஹாவித்யா’’ என்று அழைக்கிறார் பட்டர். இனி ஒவ்வொன்றாய் தனித்து காண்போம்.

எந்த ஒரு தேவதையின் உபாசனையிலும், மந்திரஜபம் மிக முக்கியமான ஒன்றாகும். இதை “ஜெபஐக்கியம்’’ என்பார்கள். இந்த ஜெபத்தின் அடித்தளம் தியானம்ஜெபம் தொடங்கும்போது, அந்த தேவதைகளுக்கு உரிய பண்புகளை உருவத்தை, ஆயுதத்தை, மனதில் எண்ணிய படியே ஜெபிக்க வேண்டும். ஜபம் செய்யும் போது உமையம்மையை பற்றிய நினைவு நீளும். அந்த நீண்ட இடை
விடாத தொடர்ந்த எண்ணத் தொடர்ச்சிக்கே தியானம் என்று பெயர்.

``த்யானேன லபதே ஸர்வம்
த்யானேன விஷ்ணு ரூபக:
யஸ்ய யஸ்யச மன்த்ரஸ்ய
உத்திஷ்ட யாச தேவதா
சிந்தையித்வா ததாகாரம்
மனஸா ஜபமாசரேத்’’
– என்ற நிர்வாண தந்த்ர வாக்கால் அறியலாம்.

இதையே அபிராமி பட்டர், அந்தந்த தியானம் செய்ய வேண்டிய தேவதையின் பெயரையே இந்த பாடலில் வரிசையாகச் சொல்கிறார். இனி பாடலுள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* பயிரவி
* பஞ்சமி
* பாசாங்குசை பஞ்சபாணி
* வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி
* ஒளிரும் கலா வயிரவி
* மண்டலி
* மாலினி
* சூலி
*வராகி
* என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
இவ்வரிசையின் படி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“பயிரவி”

பைரவி தியானம் வாமோர்த்வே சின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்வே தீக்ஷணம்
கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்
திக்வஸ்த்ரம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
விஸ்பூர்வயத் வ்யத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் பைரவீம் தாம் பஜேஹம்

இவளது இடது மேல்கரத்தில் வெட்டப்பட்ட தலை, அதன் கீழ் கரத்தில் வரம், வலது மேல் கரத்தில் கூரிய கத்தி, அதன் கீழ்க் கரத்தில் அபயம் கொண்டவளும், கருமையான நிறந்தினளும், ஆடையற்றவளும் மேல் நோக்கிய கேசமுடையவளும், சவங்களின்கரத்தாலான ஒட்டியாணத்தை அணிபவளும், சவத்தின் ரத்தத்தால் பூர்ணமான திறந்த வாயினளும், பக்தர்களுக்குப் பலனளிப்பவருமாகிய “பைரவி” தேவியைப் பூஜிக்கின்றேன். என்பதையே “பயிரவி” என்றார்.

“பஞ்சமி”

பஞ்சமி தியானம் [சக்தி பஞ்சாக்ஷரி]
“மூலே கல்பத்ரு மஸ்ய த்ருத கனக நிபம்
சாரு பத்மா சனஸ்த்தம்
வாமாங்காரூட கெளரீ நிமிட குச
பரா போக காடோப கூடம்
சர்வாலங்கார காந்தம் வரபரசு
ம்ருகாபீஷ்ட பாஹிநம் த்ரிநேத்ரம்
வந்தே பாலேந்து மௌலிம் குஹ
கஜவதனாப்யாம்
உபாஸ்லிஷ்ட பார்ஷ்வும்’’

கற்பக விருட்சத்தின் அடியில் அழகிய பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். உருக்கின பொன் போன்ற திருமேனி நிறமுடையவர். இவரது இடது புறம் மடியில் பார்வதி அமர்ந்திருப்பாள், அவளால் தனது அடர்த்தியான [இடை வெளியில்லாத] கொங்கைகளால் அகன்ற மார்பில் நன்றாக அணைந்து கொள்ளப்பட்டிருப்பார். ஆபரணங்கள் எல்லாம் அணிந்து அழகு மிகுந்தவராய் மனதைக் கவருகிறவராயிருப்பர். வரதமுத்திரை, மழு, மான், அபயத முத்திரை, இவற்றைத் தனது நான்கு கைகளால் தரித்திருப்பர். மூன்று கண்களுள்ளவர். பிறைச் சந்திரனைமுடியில் சூடியவர். முருகன் பிள்ளையார் இவர்களால் இரு புறங்களிலும் சூழப்பட்டவர். இவ்வாறான சிவபெருமானை வணங்குகிறேன். என்பதையே “பஞ்சமி” என்றார்.

“பாசாங்குசை பஞ்சபாணி”

“இக்ஷுகோதண்ட – புஷ்பேஷு – பாசாங்குச
சதுர்ப்புஜாம்
ஸர்வதேவமயீ – மம்பாம் ஸர்வ – ஸௌபாக்ய
– ஸுந்தரீம்
ஸர்வ தீர்த்தமயீம் திவ்யாம் ஸர்வகாமப்ர
பூரிணீம்
ஸ்ர்வ – மந்த்ரமயீம் நித்யாம் ஸர்வாகம
விசாரதாம்
ஸர்வ – க்ஷேத்ரமயீம் தேவீம் ஸர்வ –
வித்யாமயீம் சிவாம்
ஸர்வயாகமயீம் வித்யாம் ஸர்வ – தேவஸ்வ
ரூபிணீம்
ஸர்வ – சாஸ்த்ரமயீம் நித்யாம் ஸர்வாகம
– நமஸ்க்ருதாம்
ஸர்வாம்னாயமயீம் தேவீம் ஸர்வாயதன
– ஸேவிதாம்
ஸர்வானந்தமயீம் ஜ்ஞான – கஹ்வராம் ஸம்விதம் பராம்
ஏவம் த்யாயேத் பராம்பாம் ஸச்சிதானந்த – ரூபிணீம்’’

இக்ஷுகோதண்ட – புஷ்பேஷு என்பது, கரும்புவில்லும் புஷ்பபாணமும் பாசமும் அங்குசமும் தாங்கிய நான்கு கைகளையுடையவளாகவும் எல்லா தேவர்களையும் தன்னுள் கொண்டவளாகவும், சர்வ செளபாக்கிய ஸுந்தரியாகவும், தெய்வீகம் வாய்ந்த ஸகல புண்ய தீர்த்த வடிவினளாகவும், எல்லா ஆசைகளையும் பூர்த்திசெய்விப்பவளாகவும், சகல மந்திர ரூபிணியாகவும், சகல ஆகமங்களின் விளக்கமாகவும், எல்லா சேத்திர வடிவினளாகவும், எல்லா உபதேச வடிவினளாகவும், எல்லா ஆலய வடிவினளாகவும், ஆனந்த ஸ்வரூபிணியாகவும், ஞானத்தின் உறைவிடமாகவும், அம்பிகையை தியானம் செய்ய வேண்டும். இதையே “பாசாங்குசை பஞ்சபாணி” என்றார்.

“வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி
காளி”
“மாதர்மே மதுகைடபக்னி மஹிஷ ப்ராணாப
ஹாரோத்யமே
ஹேலாநீர்மித தூம்ரலோசன வதே
ஹேசண்டமுண்டார்த்தினி
நிச்சேஷீக்ருத ரக்தபீஜ தநுஜே நித்யே
நிசும்பா வாஹே
சும்பத்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே
நமஸ்தேம்பிகே’’

இந்த ஸ்லோகம், துர்க்கை, சாமுண்டி, மகிஷமர்த்தினி அனைவரும் அம்பிகை ஒருத்தியே என்பதை தெளிவுபடுத்துகிறது. மதுகைடபர்களை அழித்தவளே மஹிஷனை வதம் செய்தவளே, விளையாட்டாகவே தூம்ரலோசனை சம்ஹாரம் செய்தவளே, சண்முண்டர்களை ஒழிந்தவளே, ரக்த பீஜனை மிச்சமின்றி ஒழித்தவளே, நிசும்பனை சம்ஹரித்தவளே, சும்பனைக் கொன்றவளே தாயாகிய துர்க்காதேவியே பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாயாக.

“அதிரௌத்ர மஹா தம்ஸ்ட்ரா ப்ருகுடீ
குடிலேக்ஷணா
விவர்த்த நயநா சூரா தீர்க்க கோணாம
தாந்விதா
ஸ்நிக்த கம்பீர நிர்கோஷா நீல ஜீமூத
சந்நிபா
த்ரிசூல வக்த்ரதோர் தண்ட நக கீசக வாதினீ
அதிரக்தாம்பரா தேவீ ரக்தமாம்சா
சவப்பிரியா
சிரோமாலா விசித்ராங்கீ சின்வந்தி சோனி
தாசவம்
ந்ருத்யந்தீச பிசாச கணசேவிதா
பிசாச ஸ்கந்த மாருஹ்ய ப்ரமந்தி வசுதா தலம்
இத்தம் பூதாம் பத்ரகாளிம் மாத்ருபி:
பரிவாரிதாம்’’.

மிகவும் பயங்கரமானவள், பெரிய கோரைப் பற்களுள்ளவல். புருவங்களை நெறிப்பதினால் கோணலான கண்களையுடையவள். சுழல் போன்ற கண்களுள்ளவள். வீறுடையவள் நீண்ட மூக்குடையவள் மதம் [போதை] உள்ளவள். இனிய கம்பீரமான குரலுள்ளவள். கரியமுகில் கிறத்தவள். புருவங்களை நெறிப்பதினால் தீப்பிடித் தெரிகின்றவாளாகக் காட்சியளிப்பவள். பெரிய முகத்துடன் பயங்கரமாகத் தோன்றுபவள். கோரைப் பற்களுடன் கூடிய உதடுகள், துடிக்குமாறு கோபத்தினால் சிவந்த கண்ளுள்ளவள். சிவந்த நீண்ட தலைமயிருடையவள், த்ரி சூலத்தையேந்திய உக்ரமான தடிபோன்ற கைகளின் நகங்களால் [நுனி விரல்களால்] புல்லாங்குழலை இசைப்பவள். மிகமிகச் செந்நிறமான ஆடையணிந்தவள்.

ரத்தம், மாமிசம், கள், இவற்றில் ஆசையுள்ளவள், தலைகளாலான மாலையைஅணிந்து அற்புதமாகப் பிரகாசிக்கிற உடம்பையுடையவள். ரத்தம், கள், இவற்றைத் தேடுகிறவள், கூத்தாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருப்பவள். பிசாசங்களின் கூட்டங்களால் சூழப்பட்டவள். பிசாசத்தின் தோளில் ஏறிக்கொண்டு பூமியைச் சுற்றித்திரிபவள். [ஏழு] மாத்ருக்களால் சூழப்பட்டவள். [இவ்வாறாக பத்ரகாளியை அப்யசிக்கவேண்டும்]. இதையே “வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி” என்கிறார்.

“ஒளிரும் கலா வயிரவி”

தியானம்
“பஞ்சாஷத்வர்ண பேதைர் விஹித வதனதோ
பாதயுக் குக்ஷி வக்ஷோ
தேஸாம் பாஸ்வத் கபர்த்தா கலித
ஸஸிகலா மிந்து குந்தாவ தாதாம்
அக்ஷஸ்ரக் கும்ப சிந்தாகலி வரகராம்
த்ரீக்ஷணா மப்ஜ ஸம்ஸ்தா
மச்சா கல்பா மதுச்ச ஸ்தன ஜகன பராம்
பாரதீம் தாம் நமாமி’’

மாத்ருகா அக்ஷரங்கள் ஐம்பதினையும் முகமாகவும், கை, கால்கள், வயிறு, மார்பு முதலான உடலின் பகுதிகளாவும், ஒளி வீசும் சந்திர கலையை சிரம் தனில் சூடியும், வெண்மைநிறம் உடையவளும், அக்ஷமாலை. அமிர்தகுடம், புத்தகம், வரமுத்திரை ஆகியவற்றை கரங்களில் தரித்திருப்பவளும், மூன்று கண்களைக் கொண்டவளும், பளிங்கு போன்ற வடிவினளும், கமலமலரில் வீற்றிருப்பவளுமாகிய பாரதி தேவியை வணங்குகிறேன்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi