உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தகரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே.
(என்பத்தி இரண்டாவது அந்தாதி)
“ஆதியாக”
தியானத்தினால் ஏற்படும் விளைவுகளையும் நன்மைகளையும் விளக்கி அதைச் செய்ய தூண்டுகிறார். செய்முறை தியானத்தை விளக்கிக் காட்டுகிறார். தியானத்தை சரியாக செய்கிறோமா என்பதை பரிசோதித்து பார்க்க அளவு கோலையும் வைத்திருக்கிறார். இனி பாடலுக்குள் நுழைவோம்.
‘`அந்தாதி பொருட்சொல் வரிசை’’
*அளியார் கமலத்தில் ஆரணங்கே
*அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை
*உள்ளுதொறும்
*களியாகி
*அந்தகரணங்கள் விம்மி
*கரைபுரண்டு வெளியாய்விடின்
*எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.
“அளியார் கமலத்தில் ஆரணங்கே’’
‘`அளி’’ என்றால் வண்டு, ‘`ஆர்’’ என்றால் மொய்க்கின்ற, ‘`கமலத்தில்’’ என்றால் தாமரையில், ‘`ஆரணங்கே’’ என்றால் அதில் வாழ்கின்ற தேவதையே, ‘`அளியார் கமலத்தில் ஆரணங்கே’’ என்பதனால் இதயத் தாமரையில் வண்டாக வாழ்கின்ற தேவதையே என்று உமையம்மையை குறிப்பிடுகின்றார். ‘வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள்’ (90) என்பதனால் அறியலாம். மேலும், ஹ்ரீங்காரமாகிற தாமரையில் மொய்க்கின்ற வண்டாக உமையம்மை இருப்பதையே திரிசதியானது. `ஹ்ரீங்காரம் போஜ ப்ருங்கிகா’ என்பதனால் நன்கு உணரலாம்.
அபிராமிபட்டர் தன் இதயத் தாமரையில் ‘ஹ்ரிம்’ என்னும் மந்திரத்தை மானசீகமாக நினைத்தே வாயினால் உச்சரித்து ஜபம் செய்யாமல் மனதிற்குள்ளேயே ஜபம் செய்வதையே “ஆர்” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ‘`ஆர்’’ என்ற சொல்லிற்கு சார்ந்தது என்பது ஒரு பொருள். தாமரை, மலர்தல், வண்டு மொய்த்தல் போன்ற செயல்பாடுகள் ஒன்றோடு ஒன்று சார்ந்தது. ‘`அளியார்’’ என்பதனால் உமையம்மையையும் அவளுக்குரிய மந்திரத்தையும் ‘`ஆரணங்கே’’ என்பதனால் உமையம்மையையும் அவள் அருளையும் குறிப்பிடுகிறார். மந்திரம் ஜபம் செய்வதனால் இதயத் தாமரை மலர்கிறது. இதயத் தாமரை மலர்வதனால் வண்டு மொய்க்கிறது.
வண்டு மொய்ப்பதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. அதனால் ஆனந்தம் தோன்றுகிறது. இந்த ஆனந்தத்தை தோற்றுவிப்பது உமையம்மையின் அருளே என்கிறார் பட்டர். மேலும் ‘ஹரீம்’ என்பது உமையம்மையின் மந்திரம். அதை ஜெபிக்காமல் த்யானமாகவும் அப்யசிக்கலாம் என்கிறது ஸ்ரீவித்யா தந்திரம். எப்படி த்யானம் செய்ய வேண்டும் என்பதை மந்திர த்யானத்தினால் உணரலாம். இந்த தியானத்தை லிபி தியானம் என்கிறது ஆகமம்.
‘‘தேவீம் குந்தேந்து கௌராம்
அமிர்த
கரகலா
ஸ்மேர கோடீர பந்தாம்
முத்ரா போதாக்ஷமாலா
வரகளித கராம்
புஸ்தகா க்கிராந்த ஹஸ்தாம்
சுப்ரா கல்பாம் த்ரீநேத்ராம்
தீரிபுவண
நமிதாம்
அக்ஷராதீன மூர்த்திம்
வந்தே வாக்தேவதாம் தாம் ஜெகத்
உதயகரீம்
மாத்ரு காம் விஸ்வயோனிம்’’
என்ற மந்திர எழுத்துக்களை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பதை சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார் பட்டர். இதன் பொருளை அறிந்தால் இப்பாடலின் வரியை மேலும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். குருக்கத்திப்பூ, சந்திரன் இவை போல் வெண்மை நிறமுள்ளவள். அமுதகிரணனாகிய சந்திரனுடைய பிறையினால் ஒளிவீசும் முடியையுடையவள், ஞான முத்திரை, அட்சமாலை, வரத முத்திரை, சுவடி இவற்றைக் கைகளில் தரித்தவள், வெண்மையான ஆபரணங்களை அணிந்தவள், மூன்று கண்களுள்ளவள், மூவுலகங்களாலும் வணங்கப்பட்டவள் எழுத்துக்குள்ளடங்கிய வடிவத்தை உடையவள் சொற்களின் தேவதையானவள், உலகங்களுக்கெல்லாம் மேன்மையைத் தருபவள், உலகங்களுக்கெல்லாம் மூலகாரணமாக உள்ள அக்ஷர [எழுத்து] வடிவமாயுள்ளவள் அந்த தேவியை வணங்குகின்றேன். உமையம்மையை மந்திர வடிவத்தில் தியானம் செய்வதையே மிகவும் சுருக்கமாக சூத்திரம் போல் இந்தப் பாடலின் ‘`அளியார் கமலத்தில் ஆரணங்கே’’ என்கிறார்.
‘`அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை’’‘`
அகிலாண்டமும்’’ என்பதனால் இவ்வுலகம் முழுவதையும் மற்றும் இவ்வுலகத்தை போல உள்ள மற்ற கிரஹத்தையும் இணைத்து ஒரே சொல்லால் குறிப்பிடுகின்றார். ‘`நின்’’ என்பதனால் உமையம்மையை குறிப்பிடுகின்றார். ஸ்ரீசக்கரத்தையும் சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம் இவைகளின் வழியே வெளியிடப்படும் ஒளிக் கற்றைகளையும் மேகத்திலுள்ள மின்னலையும் சேர்த்தே ‘`ஒளியாக’’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார். ஒளிர்விக்கக் கூடிய பொருளான உமையம்மையே ‘`நின்ற’’ என்ற சொல்லால் சூட்டுகிறார். இந்த சொல்லானது மிக நுட்பமாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது. சூரியன், சூரிய ஒளி, சந்திரன், சந்திரனின் ஒளி, நெருப்பு, நெருப்பின் ஒளி, மின்னல், மின்னலின் ஒளி என்று மிக நுட்பமாக பிரித்தறிய வேண்டும்.
சூரியன் ஒளிக்கு ‘சுரா’ என்று பெயர். சந்திரன் ஒளிக்கு ‘கௌமுதி’ என்று பெயர். தீயின் ஒளிக்கு ‘ஜுவாலா’ என்று பெயர். மின்னலின் ஒளிக்கு ‘வியுத்’ என்று பெயர். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பண்பை உடையது. சூரிய ஒளி படைப்பாற்றலை கொண்டது, சந்திரன் ஒளி காப்பாற்றுவது, தீயின் ஒளி விளக்கும் ஆற்றல் கொண்டது, மின்னலின் ஒளி மறைக்கும் ஆற்றலை கொண்டது.
இந்த அனைத்து ஆற்றலின் வடிவையே உமையம்மை என்று கூறாமல் ‘`நின்ற’’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதனால் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரே ஆற்றலை உமையம்மை என்கிறார். அந்த ஆற்றல் அனைத்திலும் நிறைந்து நிற்கின்றது. அது நிற்பதனாலேயே அனைத்தும் ஒளிர்கின்றது. ‘ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே’ (16) என்ற வாக்கால் நன்கு உணரலாம். மேலும் ‘உதிக்கின்ற செங்கதிர்’ (1) `பனிதரும் திங்களும்’ (4) ‘கைவந்த தீயும்’ (98) ‘மின் ஆயிரம் ஒரு மெய்வடி வாகி’ (55) ‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும்’ (19) என்பதனால் ‘`அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற’’ என்கிறார்.
‘`ஒளிர்திருமேனியை’’ என்பதால் குறிப்பாக ஸ்ரீசக்கரத்தையும் கோயில்களில் எழுந்தருள செய்யப்பட்ட உமையம்மையின் திரு உருவையும், அதன்பின் வைக்கப்பட்ட பிரபாவளியை தமிழில் திருவாட்சி என்பர். உமையம்மைக்கு அணிவிக்கப்படும் ஸ்ரீசக்ர தாடங்கம், ஸ்ரீசக்கர பதக்கம், இவற்றில் ஒளிவிடும் தங்கத்தில், மாணிக்கம், முத்து, பவளம் போன்ற நவரத்தினங்களை பதிப்பர். அதையும் ‘`ஒளிர்திருமேனி’’ என்றே குறிப்பர். ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியன், சந்திரன், வேள்வித்தீ [யாக சாலை] இவை அனைத்தையும் இணைத்தே ‘`அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை’’ என்கிறார்.
“உள்ளுதொறும்’’
என்பது ஆகம கலைச்சொல். இதற்கு நினைப்பது என்பது பொருள். தொடர்ந்து இடையீடின்றி நினைப்பது, ஒன்றையே நினைப்பது என்பதையே ‘`உள்ளுதொறும்’’ என்கிறார். இதை தியானம் என்று வடசொல்லால் குறிப்பிடுகின்றார். இந்த தியானமானது மூன்று முக்கிய பிரிவுகளாக அமைந்துள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொண்டால் இச்சொல்லின் விளக்கத்தை முழுவதுமாய் அறிவதற்கு உதவும்.
தியானம் என்பது தியானிக்கப்படுகிற பொருள் என்ன என்பது சார்ந்து அமையும். தியேயம் என்று இதைக் குறிப்பிடுவர். தியானம் என்பது தியானிப்பவரின் உண்மை இயல்பு சார்ந்து அமையும். தியாத்ரு என்று இதைக் குறிப்பிடுவர். தியானம் என்பது மனதிலே ஒரு பொருளை நினைவலைகளாய் பதித்து, அந்த ஒரே பொருளைப் பற்றி மட்டும் நினைத்து, மற்ற நினைவுகளை மறக்கச் செய்வதற்கான மனதின் செயல்பாடாகும். உள்நோக்கி உள்ளத்தைக் கொண்டு புறம் நீக்கி, அகம் நோக்கி பயணிப்பதாகும். இதையே தியானம் என்பர். சகஸ்ரநாமம் இம்மூன்றையுமே இணைத்து தியான தியாத்ரு தியேயம் என்று ஒன்றாகவே குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
இதையே ‘ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லி’ (நூற்பயன்) தியானம் செய்யும் பொருளாகவும், தியாத்ரு என்பதனால் ‘என்’ (1) என்று அபிராமி பட்டரையும் தேயத்தை `குறித்தேன்மனத்தினில்’ (76) என்பதனால் அறியலாம். சாக்த ஆகமங்கள் மேலும் மூன்று பிரிவுகளாய் தியானத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. நிர்குண பிரம்ம தியானம், சகுன பிரம்ம தியானம், உபய ரூப தியானம் என்று குறிப்பிடுவதை இனி வரிசையாகக் காண்போம்.
உமையம்மையின் உருவத்தை விளக்கி அவளது குணங்களை எண்ணிப் பார்ப்பதையே நிர்குண பிரம்ம தியானம் என்பர். `நின் அருள் ஏதென்று சொல்லுவதே’ (27) ‘ஆனந்தமாய், என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவு’ (11) என்ற வாக்கால் நன்கு அறியலாம். உமையம்மையின் உருவத்தை உறுப்புகளை ஒருங்கிணைத்து முழுமையாய் பாதாதி கேச பர்யந்தம் தியானிப்பர். இதை சகுன பிரம்ம தியானம் என்பர். ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்’ (1) ‘வதனாம் புயமும், கராம் புயமும்’ (58) ‘சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும்’ (53) ‘திருவடித்தாமரை’ (6) என்பதனால் உமையம்மையின் திருஉருவை மனதில் எண்ணி தியானிப்பதை கொண்டு அறியலாம்.
உபய ரூப தியானம் என்பது நிர்குண பிரம்ம தியானத்தையும், சகுன பிரம்ம தியானத்தையும் சேர்த்து தியானிப்பர். இதை ‘`தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம்’’ (73) என்பதனால் உருவத்தையும் ‘`ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை’’ (73) என்பதனால் அருப வடிவையும் இணைத்து தியானிப்பர். உமையம்மையின் சக்தி பீடங்களில் உமையின் முழு உருவத்தை தியானிக்காமல் குணங்களாக எண்ணி அரூபமாக ஒவ்வொரு சக்தி பீடத்திலும் ஒவ்வொரு உறுப்பை தியானிக்கிறார்கள். ‘`பாடும் மெய்ப்பீடம்’’ (60) என்பதனால் மூவகை தியானத்தை
குறிப்பிடுகிறார். அந்த தியானத்தையே ‘`உள்ளுதொறும்’’ என்கிறார்.
“களியாகி’’
தியானமானது, தியானிக்க தியானிக்க உள்ளத்தை மாற்றுகிறது. அந்த மாற்றத்தின் விளைவையே ‘`களியாகி’’ என்று குறிப்பிடுகின்றார். அந்த மாற்றத்தை விரிவாக அறிந்து கொண்டால் இச்சொல்லின் பொருள் செறிவை உணர்தல் எளிது அதை இனி காண்போம். ஐந்து விதமான தியான பயிற்சியினால் உள்ளத்தின் மாறுபாட்டை உபாசனை ரகசியங்கள் விளக்குகிறது.
முனைவர்
பா.இராஜசேகர சிவாச்சாரியார்