திருவள்ளூர்: ஆர்எம் ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளூரில் இயங்கி வரும் ஆர்எம் ஜெயின் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று டிரீம் கலாம் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு அந்த அமைப்பின் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வினோத் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார்.
இதில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மாணவிகளுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பேணி காப்பதில் அதிக ஆர்வம் காட்டும் பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். பிறகு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுகபுத்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என சங்கர் தெரிவித்தார்.