தென்காசி: ஆளில்லாத வீடுகளில் கைவரிசை காட்டிய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 263 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் ராமாலயம் காலனியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (48). குற்றாலத்தில் பலசரக்கு கடை நடத்தி வரும் இவர், கடந்த மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். கடந்த 1ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்கம் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்து 116 கிராம் தங்க நகை கொள்ளை போனதும் தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காசிமேஜர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் திருப்பதி (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது வள்ளிநாயகம் வீடு உள்பட 7 இடங்களில் கைவரிசை காட்டியதை திருப்பதி ஒப்புக்கொண்டார்.காசிமேஜர்புரத்தை சேர்ந்த ராஜா வீட்டில் 26 கிராம், திருமலைக்குமார் வீட்டில் 45 கிராம், மேலகரம் அப்பாத்துரை வீட்டில் 76 கிராம் மற்றும் காசிமேஜர்புரம் சரவணன் வீடு உள்பட 7 வீடுகளில் திருடிய 263 கிராம் தங்க நகைகள், சுமார் 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட திருப்பதி, குற்றாலத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.