மதுரை: விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மூலம் வெம்பக்கோட்டை அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பி அறிமுகமானார். அவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மூலம் எனது உறவினர் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளர் பணி வாங்கி தருவதாகக் கூறினார். இதற்காக என்னிடமிருந்து கடந்த 2020ல் ரூ.30 லட்சம் வாங்கினார். ஆனால் கூறியபடி வேலை வாங்கித்தராமல் ஏமாற்றினார். இதனால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தேன்.
இதன்பேரில் விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரம் விஜயநல்லதம்பி என்னைப் போல பலரிடம் இருந்து ரூ.3 கோடி வரை வசூலித்து பணத்தை மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்தது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மோசடி செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.