சென்னை: இல்லம் தேடி ஆவின் என்ற பெயரில் வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை இன்று அமைச்சர்கள் உதயநிதி மற்றும் நாசர் தொடங்கி வைத்தனர். கோடைக்காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்சி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக முதற்கட்டமாக 32 பேட்டரி வாகனங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கரூர் வைசியா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் பேட்டரி ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு பேட்டரி வாகனம் மற்றும் ஒரு குளிர்சாதன பெட்டியானது ரூ.1,21,658 விலையாகும்.
மேலும் ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் இந்த ஐஸ்கிரீம் வண்டியில் சாக்கோ பார், கசாடா, கேண்டி, பிரீமியம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் கிடைப்பதைஉறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.