சென்னை: ஆவின் நெய் ஒரு கிலோ 70 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 35 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையுடன் நெய், தயிர், வெண்ணெய், பாதாம் பவுடர், குல்பி ஐஸ், பால் பவுடர், ஐஸ்கிரீம், மைசூர்பா உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து விற்பனை செய்கிறது.
கடந்த 2 வருடமாக ‘ஆவின்’ பொருட்கள் விலை உயராமல் இருந்து வந்த நிலையில் பால் தவிர்த்து மற்ற பொருட்களின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆவின் நெய் 200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆவின் நெய்யை போல ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.265 ரூபாயில் இருந்து 280ஆக விற்பனை செய்யப்படுகிறது.