ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஆவடி மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் நேற்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அக்குழுவினர், டெங்கு பாதிக்கப்பட்ட பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், அண்ணா நகர், டிரைவர்ஸ் காலனி மற்றும் சோழம்பேடு பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அப்பகுதியில், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஓ.ஆர்.எஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. லாரிகளில் வரும் குடிநீர், குளோரினேட் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காலி மனைகளில் குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. தேவையற்ற பொருட்களில் தேங்கி இருந்த தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது. கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.