திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவன்னூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதாக கூறி ரூ. 180 கோடிக்கு மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து முதலில் உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த கட்சியின் திருச்சூர் மாவட்ட செயலாளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சி எம்பி கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் தற்போதைய குன்னங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான ஏ.சி. மொய்தீன் உள்பட 27 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றின் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது இந்தியாவில் இது 2வது முறை. ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.