புதுடெல்லி: டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்துவது தொடர்பாக ஒன்றிய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதனை கடுமையாக எதிர்த்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக்கூறி, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடமும், அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்திக்கவும் முயன்று வருகிறார்.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது டெல்லி அரசு விவகாரத்தில்ஆம்ஆத்மிக்கு ஆதரவு அளிக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.