சென்னை: ஆவின் பொருட்களான பனீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 35 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி ஐஸ், பால் பவுடர், ஐஸ்கிரீம், மைசூர்பா உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து விற்பனை செய்கிறது.
கடந்த 2 வருடமாக ‘ஆவின்’ பொருட்கள் விலை உயராமல் இருந்து வந்த நிலையில் பால் தவிர்த்து மற்ற பொருட்களின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பனீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பாண்டிலும் ஆவின் பனீர் மற்றும் பாதாம் பவுடர் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பனீர் ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.550ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பாதாம் பவுடர் 200 கிராம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.20 உயர்ந்து ரூ.120ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.