குன்றத்தூர்: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில், ஆடிப்பூரத்தையொட்டி நேற்று நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் காஞ்சி மகா பெரியவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு உகந்த பண்டிகைகள் அனைத்தும் இக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆடிப்பூரம் திருவிழா நேற்று முன்தினம் கோவிலில் வெகு விமரிசையாக ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக 1008 கலசம் ஸ்தாபிதத்துடன் முதல் கால பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிலையில், ஆடிப்பூரம் இரண்டாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. மேலும், நேற்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை தினம் என்பதால் வழக்கமான கூட்டத்தை விட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியுடன் 3 நாட்கள் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் துணை ஆணையர் சித்ராதேவி மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.