திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முதல் ஆடி மாத பூஜைகள் தொடங்கின. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்தார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கின.
ஆடி மாத பிறப்பான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வருகிற 21ம் தேதி வரை தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.