சென்னை: தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் தகுதியுடைய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் ‘ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு இவ்வாண்டு 2,000 பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்’ என அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்திடும் வகையில் இந்தாண்டு சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத ஆன்மிக பயணம் 5 பயண திட்டங்களாக வரும் ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. ஆன்மிக பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் (பான்) நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in < http://www.hrce.tn.gov.in > என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆடி மாத ஆன்மிக பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.