திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பால், பன்னீர், புஷ்பம், மயில் காவடிகள் எடுத்துவந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமானுக்கு தங்க கவசமும் பச்ச மரகதக்கல் டாலரும் அணிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் முருகர் மற்றும் வள்ளி, தெய்வானை கூடிய உற்சவர் மூர்த்தி ஆகியோர் தேவர் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கோயில் சார்பில் சிறப்பு கட்டணங்களாக 100 மற்றும் 200 மற்றும் இலவச தரிசனமும் சென்று தரிசனம் செய்து வந்தனர். மலையடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்வதற்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அன்னதான மண்டபத்தில் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முதல்நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மலைக்கோயிலில் இருந்து சாமி, வள்ளி, தெய்வானையுடன் புறப்பட்டு திருத்தணி, அகூர், குமாரகுப்பம், தரணிவாராகபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமை தூக்குவோர் சுவாமியை தூக்கிக்கொண்டு சரவண பொய்கை குளத்துக்கு கொண்டுவந்து தெப்பத்தில் வைத்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தபின்னர் சுவாமி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதன்பிறகு நள்ளிரவு மீண்டும் கோயிலுக்கு சென்றடைந்தார். முன்னதாக வீதியுலா வரும்போடு வீடுகள் தோறும் தேங்காய், பழம் படையல் வைத்து முருகரை தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 2 வது தெப்பம் உற்சவ விழா நடைபெறுகிறது. இதையடுத்து மலைக்கோயிலில் இருந்து கொண்டுவரப்படும் முருகர், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளுகிறார். இதன்பின்னர் இன்று ஐந்துமுறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இதில் வீரமணி ராஜ், கந்தர்வ அபிஷேக் ராஜ் ஆகியோர் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி கோட்ட ஆறுமுகசுவாமி கோயில் வண்ணமின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதுபோல் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள சத்திசாட்சி கந்தன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடி கிருத்திகை விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரன், அறங்காவலர்கள் உஷார் ரவி, மோகனன், மு.நாகன் மற்றும் இணை ஆணையர் விஜயா, கோயில் அலுவலர்கள் ஊழியர்கள் இணைந்து செய்துள்ளனர். திருத்தணி நகராட்சி சார்பில் நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி ஆணையர் அருள் ஆகியோர் தலைமையில் நகராட்சியில் சாலைகளில் குப்பை தேங்காத வண்ணமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.