திருவாடிப்பூரத்து நாயகி, பெரியாழ்வார் துளசி வனத்தில், பூமிபிராட்டி யின் அம்சமாக கண்டெடுத்து வளர்த்த ஆண்டாள் நாச்சியார்தான். ஆண்டாள் அருளி இருக்கும் “திருப்பாவை”யும் “நாச்சியார் திருமொழியும்”, “நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்’’, முதல் ஆயிரத்தில், நான்காவது பிரபந்தமாக, அமைந்துள்ளது. “நாச்சியார் திருமொழியில்” கிருஷ்ணபரமாத்மாவைத்தான் சேரவேண்டும், மணம் முடித்திட வேண்டும் என்று ஒவ்வொரு பதிகத்திலும் ஆண்டாள் இட்டிருக்கும் பாசுரங்கள், ஆண்டாள் திருமால் மேல் கொண்ட அந்த பக்திரசத்தின் எல்லையைக் காட்டி விடும் அற்புதப் பாசுரங்களாக அமைந்திருக்கின்றன.
இதில் முதல் பதிகத்தில், தன்னை ஒரு ஆய்ச்சியாகப் பாவித்துக்கொண்டு, ஆய்ச்சியர்கள் எல்லாம் எப்படி அந்த கிருஷ்ண பரமாத்மாவே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மன்மதனுக்கு ஒரு மண்டலம் பூஜை செய்தார்களோ, அப்படி ஆண்டாளும் அந்த மன்மதனை நினைத்து தோழிகளோடு சேர்ந்து மன்மதனுக்கு பூஜை செய்ததை முதல் பதிகத்தில் பதிவிடுகிறாள்.
இரண்டாவது பதிகத்தில், சிற்றில் அமைத்தல் என்று மன்மத வழிப்பாட்டிற்கான மணல்வீட்டைக் கட்டுகிறாள், மூன்றாம் பதிகத்தில் பனி நீராட்டல், நான்காம் பதிகத்தில் கூடல் இழைத்தல் என இப்படி கண்ணனைச் சேரமுடியாமல் இருக்கும் வேதனைகளை ஒவ்வொரு திருமொழி யிலும் தெரிவித்துக்கொண்டே வரும் ஆண்டாள் நாச்சியார், ஐந்தாம் பதிகத்தில் குயிலிடம், கண்ணனை எப்படியாவது என்னிடம் அழைத்து வந்து விடு என்று குயிலின் காதில் விழும்படி அமைத்திருக்கும் பாசுரங்கள், குயிலை போலவே அவ்வளவு இனிமையானவை. ஐந்தாம் பதிகத்தில் அமைந்துள்ள பாசுரங்களை படிக்கும் போது நமக்கும் ஒரு இன்பம், இனிமை என்பது ஆண்டாளின் அனுகிரஹத்தாலே தானாகவே கிடைத்துவிடும் என்பது சர்வ நிச்சயம்.
முதல் பாசுரத்தில், “நியாயமாக பார்த்தால், கிருஷ்ணபரமாத்மாவே வந்து என்னை காக்க வேண்டும். ஆனால், அப்படி அந்த கண்ணன் வரவில்லை என்றால், அவனை அழைத்து வந்து அந்த கண்ணன் என்னை காக்கும் படி செய்ய வேண்டியது உன் பொறுப்பு குயிலே” என்கிறாள் ஆண்டாள்.
“வெள்ளை விளிசங் கிடங்கைகளில்கொண்ட
விமலன் எனக்குருக்காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கடவன் வரக்கூவாய்”
எனும் இரண்டாம் பாசுரத்தில், தூய்மையான வெண்மை நிறம் பொருந்திய திருச்சங்கே, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களை வாருங்கள் வாருங்கள் என்று விளிக்கும் (அழைக்கும்) திருச்சங்கை தம் இடது கையில் கொண்டவனே என்று ஆரம்பித்து அப்படிப்பட்ட பெருமாள் எனக்கு தன்னுடைய திவ்ய திருமேனியை காட்ட மறுக்கிறான். என்னுள் புகுந்து என்னை நைவித்து, மீண்டும் அவனே என்னை உயிர்ப்பித்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறான்.
செண்பகப்பூவின் தேனை பருகி ஆனந்தமாக இசை பாடிக் கொண்டிருக்கும் குயிலே, மழலை சொற்கள் சொல்லி விளையாடாமல், எனக்காக திருமலையில் நின்றுக் கொண்டிருக்கும் அந்த வேங்கடவன் என்னை தேடி வரவேண்டும் என்று கூவுவாய் என்கிறாள்.நம் விரோதிகளை போக்கி தம் திருமேனியை நமக்கு நன்கு அனுபவிக்கும்படியாக செய்பவன் பகவான். அப்படிப்பட்ட உயர்ந்த கல்யாண குணத்தை கொண்ட அந்த பகவான் என்னைத் தேடி வரும் படி நீதான் கூவ வேண்டும் என்று மூன்றாம் பாசுரத்தில் முறையிடுகிறாள் ஆண்டாள்.
“என்பு உருகி” என்று தொடங்கும் நான்காம் பாசுரத்தில், பிரிவினால் உண்டான நோயால் என் எலும்பெல்லாம் உருகி இருப்பது பற்றி உனக்கு தெரியாதா குயிலே? என்று “அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே!”… என் தலைவனான அந்த திருமாலிடம் சேராமல் பிரிவு எனும் நோயால் வாடி, வைகுந்த நாதன் எனும் அந்த கப்பலையும் பெறாமல் துன்ப கடலில் மூழ்கி, நான் படும் வேதனையை போக்க, குயிலே நீ கூவுவாய் என்று அழகாய் கூறுகிறாள்.
நாச்சியார் திருமொழியிலேயே, ஒப்பற்ற பாசுரம் என்று சொல்லக் கூடிய ஐந்தாம் பாசுரத்தில், தன்னுடைய ஊரான வில்லிப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபத்ரசாயி பெருமாளை நான் காண வரும்படி கூவுவாய் குயிலே என்கிறாள்.
“மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூ ருறைவான்றன்
பொன்னடி காண்பதோ கண்ணினை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி
யெடுத்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வான் குயிலே!
உலகளந்தான் வரக்கூவாய்.”
“என் பொருகயற் கண்ணினை” என்று தம் இரு கண்களும் அந்த கண்ணன் எப்போது வருவான், வடபத்ரசாயி பெருமாள் எப்போது வருவான் என்று பார்த்துக் கொண்டே சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன என்கிறாள். குயிலே, நீ எனக்காக கூவி அந்த பெருமாளை இங்கே வரச் செய்துவிட்டால், என் கிளியோடு உன்னை நட்பு பாராட்ட வைக்கிறேன். என்னுடைய கிளி எப்படிப்பட்டது தெரியுமா? இன்னடிசிலொடு பாலமுதூட்டி யெடுத்த என் கோலக்கிளி அது என்கிறாள். ஆறாம் பாசுரத்தில், “குயிலே, நான் உயிர் தரிப்பதற்கு மூல காரணமான அவ்வெம்பெருமானை இங்கே வரும்படி நீ கூவவில்லையானால், என் வாழ்நாள் உள்ளளவும் என் தலையை உன் காலில் வைத்திருப்பது தவிர வேறொரு பிரதி உபகாரமும் செய்ய அறியேன்”
என்கிறாள்.
ஏழாம் பாசுரத்தில், “அழகிய குயிலே” என்றும் எட்டாம் பாசுரத்தில், “இனிமையான பழங்கள் உடைய மாந்தோப்பிலே சிவந்த துளிர்களை அலகால் கொத்தும் இளங்குயிலே” என்றும் குயிலை அழகாய் அழைக்கும் ஆண்டாள், ஒன்பதாம் பாசுரத்தில், “பச்சைக்கிளி போன்ற நிறம் படைத்த, திருமாமகள் கேள்வனின் வலையில் சிக்கித் தவிக்கிறேன். வண்டுகள் ரீங்காரமிட்டு விளையாடும் சோலையில் வாழும் குயிலே.. நான் சொல்வதை கவனமாக கேள், எனக்காக நீ ஒரு வேலை செய்ய வேண்டும்.
அது என்ன தெரியுமா? சங்கோடு சக்கரம் ஏந்திக் கொண்டிருக்கும் அந்த திருமால் இங்கு வரும்படி நீ கூவ வேண்டும் அதை செய்யாவிட்டால் என்னுடைய பொன் வளையலையாவது நீ மீட்டிக் கொண்டு வந்து தர வேண்டும். இந்த சோலையிலே நீ இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், நான் ஆசைப்பட்டு உன்னிடம் சொன்ன இரண்டு செயல்களில் ஒன்றையாவது செய்” என்று சற்றே மிரட்டும் பாணியில் சொல்கிறாள் ஆண்டாள்.
பத்தாம் பாசுரத்தில், “பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டான், அதனால் நான் துன்பப்பட்டு கொண்டிருக்கிறேன். தென்றலும், நிலவும் வாட்டுகிறது. குயிலே, இன்று நாராயனனை வரும்படி நீ கூவாமல் போனால், உன்னை இந்த சோலையிலிருந்து நான் விரட்டி விடுவேன்” என்று குயிலை
விரட்டுவேன் என்றே மிரட்டுகிறாள்.
பதினோராவது பாசுரத்தில், இந்த பத்து பாசுரங்களை படிப்பவர்கள் பெருமாளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக, அந்தரங்க தொண்டர்களாக அவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுவார்கள் என்று சொல்லி இருக்கும் ஆண்டாளின் குயில் விடு தூதினை மனதில் நிறுத்தி திருமாலின் திருவருளுக்கு பாத்திரமாவோம்.
நளினி சம்பத்குமார்