காஞ்சிபுரம்1: காஞ்சிபுரத்தில் நடந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரரின் ஆதார் கட்டாயம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நல்லுறவு மையம் கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர் பி.செந்தில்குமார் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்து உரிமை தொகை வழங்கிடும் வகையில் தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டதில் பயன்பெற விண்ணப்பம் பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 550 முகாம்கள் 24.7.2023 முதல் 4.8.2023 வரையிலும், 2ம் கட்டமாக 193 முகாம்கள் 5.8.2023 முதல் 16.8.2023 வரையிலும் நடைபெற உள்ளது. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள், ஒவ்வொரு ரேஷன் கடைகளில் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்கும் பணியானது ரூ.20ம் தேதி முதல் 23ம் தேதி வரை வழங்கப்படும்.
மேலும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், இணையதளம், கழிப்பறை, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் ஆகியவற்றினை உறுதிப்படுத்துமாறு கேட்டு கொண்டுள்ளார்.
எனவே, விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரவேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை.
மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய் துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை. விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பப்பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். மேலும், ரேஷன் கடைகளில் தகவல் பலகையில், முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் குறித்து வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப்பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளில் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைபேசியின் வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் கைபேசி எண் இணைக்கப்பட்டிருந்தால், அந்த கைபேசி முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப்பதிவு எளிமைப்படுத்தும். ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ், பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு எடுத்துவர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 044-2723 7107 மற்றும் 044-2723 7207 தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர்களின் பகுதிகளில் நடைபெறும் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. எனவே, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் எவரும் விடுபடாத வகையில், முகாம்களை சிறப்பாக நடத்திட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுகொண்டார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக நடத்திட அறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் கிளை இடைநிலைப்பள்ளி மற்றும் பிஎம்எஸ் உயர்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறும் பகுதியினையும், யாகசாலை மண்டபத் தெரு மற்றும் மலையாளத் தெரு ஆகிய பகுதிகளில் விண்ணப்பங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டு வரும் நிகழ்வினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.