* டெலிகிராம், வாட்ஸ்அப்களில் 40க்கும் மேற்பட்ட குழுக்கள்
* மோசடியில் தீவிரம்
* புதுப்புது கெட்டப்புகளில் வரும் மோசடி
* ரயில்வே நிர்வாகம் மீது நம்பிக்கையை இழக்கும்பொதுமக்கள்
சிறப்பு செய்தி
ஜூலை 1ம் தேதி முதல் தட்கல் திட்டம் மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்ட நபர்களே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜூலை 15 முதல் கவுன்டர்களில் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், ‘சர்வர்’ முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜென்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ளது. அவர்களிடம் பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். ஏராளமான போலி கணக்குகளை துவங்கி, தட்கல் டிக்கெட்டுகளை ஏஜென்ட்டுகள் வாங்குவது போன்றவைகளை தடுக்க தான் இந்த அறிவிப்பை ரயில் நிர்வாகம் கொண்டு வந்தது. ஆனால், ‘நீ என்ன வேணா பண்ணு.. நான் இப்படி தான் பண்ணுவேன்’ என ரயில்வே நிர்வாகத்துக்கு மோசடி கும்பல் தொடர்ந்து சவால்களை விட்டு வருகின்றன.
இந்திய ரயில்வேயின் தட்கல் முன்பதிவு முறையை ஏமாற்றி, டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் ஆதார் அடையாள அட்டைகளை விற்கும் ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிவிப்புக்கு அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி, 40க்கும் மேற்பட்ட ஆன்லைன் குழுக்கள் ஆதார்-சரிபார்க்கப்பட்ட ஐஆர்சிடிசி ஐடிகளை ரூ.360 முதல் விற்பனை செய்கின்றன. ஓடிபி சே வைகளுடன், டிராகன், JETX, Black Turbo போன்ற பாட்களை பயன்படுத்தி 60 வினாடிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றன.
இந்த மோசடியால் பயணிகள் மற்றும் இந்திய ரயில்வே கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக, தனிப்பட்ட தரவு திருட்டு மற்றும் அடையாள மோசடி, மோசடி கும்பல்கள் ஆதார் எண்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி ஐடிகளை விற்பனை செய்கின்றன. இதனால், பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கி, அடையாள மோசடிக்கு வழிவகுக்கிறது. WinZip APK ஆக மாறுவேடமிட்ட சில பாட்கள் டிரோஜன் மால்வேர் கொண்டவை.
இவை பயனர்களின் மொபைல் சாதனங்களில் இருந்து முக்கியமான தரவுகளை, பயனர் அறியாமல் திருடுகின்றன. இதில் வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் அடங்கும். பயணிகள் மோசடி கும்பல்களிடம் ஆதார்-சரிபார்க்கப்பட்ட ஐடிகளை வாங்குவதற்கு ரூ.360 முதல் ரூ.5,000 வரை செலவிடுகின்றனர். ஆனால், இந்த ஐடிகள் முடக்கப்படும் பட்சத்தில், அவர்களின் பணம் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் சுவாகாதான்.
அதேபோல், டிக்கெட் கிடைப்பதில் சிக்கலும் ஏற்படும். ஏற்கனவே முதல் ஐந்து நிமிடங்களில் 50 சதவீத உள்நுழைவு முயற்சிகள் பாட்களால் நடப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் இந்த மோசடி கும்பல்களால் உண்மையான பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டுகள் கிடைப்பது கடினமாகிறது, குறிப்பாக அவசர பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும், மோசடி கும்பல்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை பிளாக்கில் அதிக விலைக்கு விற்கின்றன. இதனால், பயணிகள் அவசர தேவைகளுக்கு அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும் நிலை உள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் தட்கல் முறையின் மீதான நம்பிக்கையை ரயில் பயணிகள் இழக்க வாய்ப்புள்ளது.
முகவர்கள் மட்டுமல்ல, ஐஆர்சிடிசி அமைப்பில் உள்ளதாகக் கூறப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் போலி சேவை வழங்குநர்கள் நிறைந்த மின்னணு டிக்கெட் மோசடி கும்பல்கள், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் செயல்படுகின்றன. தங்கள் அடையாளங்களை மறைக்க, இந்த குழுக்களின் நிர்வாகிகள் சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மோசடி கும்பல்கள் Dragon, JETX, Ocean, Black Turbo, மற்றும் Formula One போன்ற பாட்களை \\\\”உடனடி தட்கல் முன்பதிவுகளுக்கு\\\\” என்று விளம்பரப்படுத்தி, ரூ.999 முதல் ரூ.5,000 வரை விலையில் விற்பதை அந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறிந்தது. வாங்கிய பிறகு, பயனர்கள் டெலிகிராம் குழுக்கள் மூலம் இந்த பாட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டப்படுகின்றனர். அதாவது, ஐடி வாங்கிய பிறகு, எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும். அதற்கு எந்தெந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டும் என அ முதல் ஃ வரை அந்த மோசடி கும்பல்கள் வழிகாட்டி விடுகின்றனர்.
பாட்களால் ஏற்படும் அதிகப்படியான உள்நுழைவு முயற்சிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தின் செயல்திறனை பாதிக்கின்றன. இதனால், உண்மையான பயணிகளுக்கு முன்பதிவு செய்வது மெதுவாகவும், சிக்கலாகவும் மாறுகிறது. இதுபோன்ற மோசடிக்காரர்களின் செயல்களால் இந்திய ரயில்வேயின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைகிறது. ரயில்வேயின் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து எதிர்மறையான கருத்தை உருவாகிறது.