ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தேவாலயத்தை சுற்றி பார்க்க அமைக்கப்பட்ட மரப்பாலம், மணலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதால் சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டின் கோரப்புயலின் எச்சங்களின் அடையாளமாக தேவாலய கட்டிடம் உள்ளது. 60 ஆண்டுகளை கடந்தும் புயல்,மழை, இயற்கை பேரிடர் என அனைத்தையும் தாங்கி இந்த தேவாலயம் மணல் பரப்பில் சிதைந்த நிலையில் நிற்கிறது. ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடியில் பார்த்துச் செல்லும் முக்கியமானது தேவாலயம். தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்பார்வையிட்டு செல்லும் தனுஷ்கோடி தேவாலயத்தை சுற்றி ரூ.40 லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மரப்பாலம் அமைக்கப்பட்டது.
மரப்பாலம் 6 அடி அகலத்தில் 90 மீட்டர் நீளத்தில் மணல் பரப்பில் அமைக்கப்பட்டது. சாலையில் இருந்து துவங்கும் இந்த பாலம், தேவாலயத்தை சுற்றி வந்து மீண்டும் சாலையில் முடிவடைகிறது. இதனால் மணலில் சிரமத்துடன் நடந்து செல்வதை விட, மரப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் எளிதாக நடந்து சென்று தேவாலயத்தை சுற்றிப் பார்த்து செல்வதற்கு வசதியாகவும் அமைந்தது. இந்நிலையில் கடற்கரையொட்டி அமைக்கப்பட்ட மரப்பாலம் முழுமையாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் முன்பே அதில் மணல் குவிந்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி சூறைக்காற்று வீசுவதால், மணல்கள் பறந்து மரப்பாலம் மணல் குவியலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடி அழிந்த பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூபாய் பல லட்சம் செலவில் மணல் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.
தற்போது தடுப்பு வேலிகள் அனைத்தும் மணல் குவியலில் மூழ்கி கிடக்கிறது. அதுபோல் நடக்காமல் மரப்பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.