சிறப்பு செய்தி சுரங்கப் பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக பாதுகாப்பு சென்சார் அம்சங்களுடன் கூடிய லுபா மற்றும் கிளாஸ் பைபர் கலப்பு ஹெல்மெட்டை கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கி அசத்தியுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் பைக் ஓட்டுபவர்களின் தலையில் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளின் அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது ஹெல்மெட். இதனை தயாரிப்பதற்கு மூலப்பொருட்களை சேகரித்தல், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, வடிவமைத்தல், ஹெல்மெட்டை அசெம்பிள் செய்தல், சோதனை மற்றும் தரக் கட்டுப்பாடு போன்ற பல கட்டங்கள் உள்ளன. ஹெல்மெட் தரநிலைகள் ஹெல்மெட் தயாரிப்புகள் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய பயன்படுத்தப்படும் வழிகாட்டுதல்களாகும். இந்த தரநிலைகள் தற்போது இந்திய தரநிலைகள் பணியகம் என அழைக்கப்படும் இந்திய தரநிலை நிறுவனம் (ஐ.எஸ்.ஐ) போன்ற இந்திய அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர, பல சர்வதேச நிறுவனங்களும் ஹெல்மெட்களுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்குகின்றன. இந்த பாதுகாப்பு மதிப்பீடுகள் தாக்க எதிர்ப்பு, ஊடுருவல் எதிர்ப்பு, தக்கவைப்பு அமைப்பு வலிமை மற்றும் பிற காரணிகள் உள்பட பல்வேறு நிலைகளில் ஹெல்மெட் தயாரிப்புகளின் செயல்திறனை சோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த தரநிலைகளை பூர்த்தி செய்ய, ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ச்சியான சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதுபோன்ற பல கட்டங்களை கடந்துதான் தரமான ஹெல்மெட்கள் வெளிவருகின்றன. இவற்றில் ஒன்றாக சுரங்கப்பணிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக பிரத்யேக ஹெல்மெட் ஒன்றை கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கழகத்தில் (சிப்பெட்) பி.ெஹச்.டி பயின்று வரும் மாணவன் திவாகர், கல்லூரி மாணவ, மாணவிகளான தீப்தி, கீர்த்தனா, விகாஷ் குமார் ஆகியோர் இணைந்து லுபா மற்றும் கிளாஸ் பைபர் கலப்பு சேர்த்து ஹெல்மெட் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். பீர்க்கங்காயின் அறிவியல் பெயர்தான் லுபா. இவை கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்று இயற்கையானதும் கூட. இதை மூலப்பொருளாக வைத்து ஹெல்மெட் தயாரிக்கப் பயன்படும் கிளாஸ் பைபரை சேர்த்து இதை உருவாக்கியுள்ளனர்.
லுபா ஹெல்மெட் நன்மைகள்: தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பல ஸ்மார்ட் சென்சார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சுரங்கத்தின் உள்ளே சென்ற நபர் ஹெல்மெட் சரியாக அணிந்திருக்கிறாரா என்பதை வெளியில் உள்ளவர்கள் கண்கானிக்கலாம். இந்த சென்சாரை பொறுத்தவரை தலை அசைவுகளைக் கண்காணிக்கிறது, சரியான தரவுகளை வழங்கும். சுரங்கத்தின் உள்ளே சில நேரங்களில் ஏற்படும் அபாயகரமான வாயுக்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை நிவர்த்தி செய்ய, ஒரு காற்றின் தரம் சென்சார் ஹெல்மெட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை கண்டறியும் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு, காற்றின் தரம் ஆபத்தான நிலையை அடையும் போது சுரங்க தொழிலாளர்களை உடனடியாக எச்சரித்து கட்டுப்பாட்டு அறைக்கும் அறிவிப்புகளை உடனடியாக அனுப்பும். லுபா இழைகள் வெப்பம் மற்றும் ஈரப் பதத்தை கட்டுப்படுத்த உதவும் இயற்கையான பண்புகளை கொண்டுள்ளது. அதனால் இந்த ஹெல்மெட்கள் நல்ல காற்றோட்டத்தை அளிக்கும். வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் அசவுகரியத்தை குறைக்கும்.
உள்ளூர் மக்களுக்கு பயன்: கிராமப்புறங்களில் எளிதில் கிடைக்கும் இந்த லுபா தான் ஹெல்மெட்களுக்கான மூலப்பொருள். குறைந்த மதிப்பில் கிடைக்கும் என்பதால், எளிதில் அணுகக்கூடியதாகவும், விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை பெற்று தரக்கூடியதாகவும் அமையும். இந்த ஹெல்மெட்களை தயாரிப்பதன் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் உள்ளூர் தொழில் முனைவோர்களையும் இது ஊக்குவிக்கும். இதுகுறித்து மாணவன் திவாகர் கூறுகையில், ‘‘திருச்சிதான் எனக்கு சொந்த ஊர். சென்னையில் பி.ெஹச்.டி படித்துக்கொண்டு திருச்சியில் கற்றதை கற்பிப்போம் என்ற குழு ஒன்றை மாணவர்களுடன் இணைந்து நடத்தி வருகிறேன். இந்த ஹெல்மெட்டை உருவாக்க கற்றதை கற்பிப்போம் குழுவில் உள்ள பிற நான்கு மாணவர்களும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் பலரும் இதற்கு உதவி செய்துள்ளனர். சுரங்கப்பணிகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உயிரை பாதுகாப்பதை மையமாக வைத்து அதிநவீன 4 சென்சார்கள் பொருத்தி உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக, அணியும் ஹெல்மெட்டிற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதற்கு முன்பு வாழை மற்றும் மூங்கிலை வைத்தும் ஹெல்மெட் உருவாக்கி இருக்கிறோம். விரைவில் இதற்கான ஐ.எஸ்.ஐ தரச்சான்றும், காப்புரிமையும் பெற்று விடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.