ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று மாலை மாடுகள் குறுக்கே சென்றதால், டிரைவர் பிரேக் அடித்ததில் ஒரு வேன் சாலையோரமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 13 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே மாகாண்யம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு பெரம்பூர் அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க, சுமார் 30க்கும் மேற்பட்ட உறவினர்கள் 2 வேன்களில் காட்டுப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன்களில் ஒன்று சுங்குவார்சத்திரம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, சுங்குவார்சத்திரம் அருகே மேட்டுக்காந்தூர் அருகே சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் கடந்து சென்றதால், வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வேனுக்குள் பயணம் செய்த 13 பேருக்கு இடிபாடுகளில் சிக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர், வேனின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 13 பேரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வேனில் சிக்கி படுகாயம் அடைந்த 13 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக செயலாளர் மேவளூர்குப்பம் கோபால், ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு வேன் கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த 13 பேரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். இவ்விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.