சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 21 வயது வாலிபர், கேரளாவுக்கு சென்று மாடுகளை விற்று விட்டு ரூ.1.65 லட்சத்துடன் நேற்றுமுன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர், பைக்கில் ஓமலூர் நோக்கி புறப்பட்டார். 5 ரோடு பகுதியில்சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை கண்ட அந்த வாலிபர் சபலத்தால் அவர்களுடன் சென்றார். அவரை திருநங்கைகள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் எம்.செட்டிப்பட்டிக்கு சென்றார். தந்தையிடம் மாடு விற்ற பணத்தை கொடுத்தபோது, அதில் ரூ.65 ஆயிரம் குறைவாக இருந்தது.
அப்போதுதான் பணத்தை இழந்தது தெரிந்து பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அவரை அழைத்துக்கொண்டு 5 ரோடு பகுதிக்கு சென்று திருநங்கைகள் ஹர்சிதா (22), அமிதா (40) ஆகியோரிடம் விசாரித்தபோது வாலிபர்தான் பணத்தை கொடுத்தார் என்றனர். ஆனால் அவர் நான் பேன்ட்டை கழற்றி வைத்திருந்தபோது ரூ.65 ஆயிரத்தை எடுத்துள்ளதாக கூறினார். இதையடுத்து திருநங்கைகளிடம் இருந்து ரூ.65 ஆயிரத்தை மீட்டு வாலிபரிடம் கொடுத்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.