சேலம்: ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஆணவ படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பிய அனுசியா என்ற பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அனுசியாவை பார்வையிட்டு மருத்துவ சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அனுசியாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் சேலம் அரசு மருத்துவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு மருமகளையும் சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் ஜாதி வெறி ஆட்டிப் படைக்கிறது. எனவே சமூகத்தில் இருப்பவர்கள் ஜாதி வெறியை எதிர்த்துப் போராட வேண்டும். அனுசுயாவிற்கும், சுபாஷிற்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது.
தமிழக அரசு ஜாதி ஆணவபடுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் ஜாதியை தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். யார் யார் எல்லாம் பின்னால் இருந்து தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள ஜாதி வெறியை எதிர்த்து போராடாமல், அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே பள்ளிக்கூடத்தில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜாதி வெறி எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.