குலசேகரம்: காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட உம்மன்கோடு முதல் பூந்தோப்பு வரை செல்லும் சானல்கரை சாலை சுமார் 3 கிலோமீட்டர் தார் சாலையாகும். பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாததால்,இந்த சாலை பழுது ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாகவும் ஆங்காங்கே சாலையில் பள்ளங்களாகவும் உள்ளது. இந்த சாலை பல்வேறு குக்கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அதிகம் செல்கிறது. சாலை மோசமாக உள்ளதால் பள்ளி வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட சிரமப்படுவதுடன் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது.
இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மிக மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பிரமுகரான திருவட்டார் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பிரேமசுதா லெனின் கோரிக்கை விடுத்துள்ளார்.