
ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் பறக்க விடப்பட்ட பந்தயப் புறா, திசை மாறி ராமேஸ்வரம் மீனவர் படகில் தஞ்சமடைந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 16ம் தேதி நீண்ட தூரம் பறந்து சென்று திரும்புவதற்கான புறா பந்தயம் நடைபெற்றது. இதில் 300 ஹம்மர் வகை புறாக்கள் கலந்து கொண்டு பறந்தன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுதனின் புறாக்களும் இப்பந்தயத்தில் பங்கேற்றுள்ளன. மறுநாள் சுதனின் ஒரு புறா திசைமாறி பறந்து, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் அரசபாண்டியின் நாட்டுப் படகில் வந்து விழுந்தது. படகில் தஞ்சமடைந்த புறாவை அவர், ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தார். புறாவை கரையூர் பகுதியை சேர்ந்த ரகுவிடம் வளர்க்க கொடுத்தார்.
புறாவின் காலில் மாட்டப்பட்டுள்ள உருளை வடிவிலான அடையாள வில்லையில் எஸ்.சுதன், ஜாஃப்னா என்று எழுதியிருந்ததுடன், மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பந்தயப்புறா குறித்து கேட்டபோது, யாழ்ப்பாணத்தில் நடந்த புறா பந்தயத்தில் தனது 30 புறாக்களை பறக்க விட்டதாகவும், 27 புறா மட்டுமே திரும்பி வந்து சேர்ந்தது.
தஞ்சமடைந்த புறா 300 கி.மீ தூரம் தொடர்ந்து பறக்கும் தன்மை கொண்டது. இந்த புறா இலங்கையில் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ளது என்று சுதன் கூறியதாக ரகு தெரிவித்தார். தன்னிடம் இருக்கும் மற்ற புறாக்களுடன் பாதுகாத்து பராமரித்து வரும் ரகு,மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது குறிப்பிட்ட புறாவை படகில் கொண்டு சென்று இலங்கை கடல் எல்லையில் பறக்க விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.