கோவை: சென்னை தொழிலதிபர் மனைவியுடன் நெருக்கமாக இருந்த ஆபாச புகைப்படங்களை காட்டி பணம் பறித்ததோடு, சென்னை தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவை வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஆப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தொழிலதிபர் தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும், வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்க மாட்டேன் என்றும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். அதில் ஆப் மூலம் அழைப்பு விடுத்து மிரட்டியது கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இது குறித்து தொழிலதிபர் சென்னை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாராயணன் என்ற பெயரில் சிம் கார்டு எடுக்கப்பட்டு அந்த சிம் கார்டை ஸ்வீட்சன் பயன்படுத்தி தொழிலதிபரை மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ரத்தினபுரியில் உள்ள ஸ்வீட்சன் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை பார்த்த ஸ்வீட்சன் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிச் சென்றார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்வீட்சன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இசை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது சென்னை தொழிலதிபரின் மனைவியும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகளுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தை பயன்படுத்தி ஸ்வீட்சன் தொழிலதிபர் மனைவியுடன் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த ஆபாச புகைப்படங்களை காட்டி ஸ்வீட்சன் பணம், நகைகளை மிரட்டி வாங்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தொழிலதிபரின் மனைவியின் தந்தை, ஸ்வீட்சனை கண்டித்தார்.
அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து ஸ்வீட்சன் மீண்டும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு தனது காதல் வலையை வீசியுள்ளார்.
இதேபோல ஸ்வீட்சன் பல பெண்களிடம் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகளை குறிவைத்து பழகி மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்துள்ளார். மேலும், ஸ்வீட்சன் தனது சகோதரி திருமணத்திற்காக சிங்காநல்லூர் நிறுவன உரிமையாளரிடம் நகை, பணத்தை மிரட்டி வாங்கி இனிமேல் உங்களது மகள் விஷயத்தில் தலையிடமாட்டேன் என கூறியுள்ளார். தொழிலதிபர்களின் மனைவியை குறிவைத்து பழகும் ஸ்வீட்சன்னுக்கு அவரது குடும்பத்தாரே உதவி செய்து வந்துள்ளனர். உல்லாச வாழ்க்கைக்கு ஸ்வீட்சன் பல பெண்களிடம் பேசி பழகி வந்துள்ளார். அவரது மனைவியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இரவு நேரங்களில் தனது மனைவி இருக்கும்போதே அவர் பல பெண்களிடம் வீடியோ கால்களில் பேசி போட்டோ எடுத்து வைத்துள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்வீட்சன்னின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதேபோல ஸ்வீட்சன் பல பெண்களிடம் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகளை குறிவைத்து பழகி மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்துள்ளார். இதற்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.