ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸில் எவர்மென் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் நோயல்(6). மாற்றுத்திறனாளி சிறுவனான நோயலை கடந்த ஆண்டு நவம்பர் முதல் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் புகார் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இந்நிலையில் நோயாலின் தாய் சிண்டி சிங் (37) வளர்ப்பு தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா சென்றுவிட்டனர். சிண்டி சிங்கின் 10 குழந்தைகளுள் நோயலும் ஒருவன். 3 குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வரும் நிலையில் கடந்த மார்ச் முதல் 6 குழந்தைகள், கணவர் ஹர்தீப் ஆகியோருடன் சிண்டி இந்தியாவில் இருக்கிறார். நோயலின் சடலம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் அவர் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனவே நோயலை சிண்டி கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் காயங்களை ஏற்படுத்தியது, குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே சிண்டி, ஹர்தீப் ஆகியோரை கண்டறிந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.