கடலூர்: ரெட்டிச்சாவடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபாகர். இவர் பெண்ணாடத்தில் இருந்து தனது லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வில்லியனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது, இன்று அதிகாலை கடலூர் அடுத்த பெரிய காட்டு பாளையம் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் லாரியின் டீசல் டேங்க் உரசியதாக தெரிகிறது. இதில் டீசல் டேங்க் திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது.
இதை பார்த்த பிரபாகர் உடனடியாக லாரியிலிருந்து இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.