கொளத்தூரில் பசுமை பூங்கா, நடைபாதை, யோகா மேடை, இறகு பந்தாட்ட மைதானம், செயற்கை நீரருவி என பிரமாண்டமாக காட்சி அளிக்கும் குளக்கரை பூங்கா திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். பரபரப்பான வாழ்க்கை சூழலில் மனிதன் தற்போது பின்னோக்கிச் சென்று பார்க்க தொடங்கியுள்ளான். பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து சற்று விலகி இயற்கை எழில் கொஞ்சும் அழகினையும் சத்தான உணவுகளையும் அமைதியான சூழ்நிலையையும் விரும்ப தொடங்கியுள்ளார்கள். காரணம் இடைவிடாத பணி, மன அழுத்தம், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் வரும் அவசரம், குடும்ப சூழ்நிலை இவை அனைத்தும் மனிதனை யோசிக்க வைக்கிறது. மேலும், அமைதியான அழகான ஒரு வாழ்க்கையை தேட வைத்துள்ளது. இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் சாத்தியம்.
நகர்ப்புறங்களில் இவை சாத்தியமா என்றால் கண்டிப்பாக கிடையாது என்று பலரும் கூறுவார்கள். அப்படி, நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கும் ஒரு அமைதியான சூழ்நிலை வேண்டும் என்பதை நினைவில் கொண்டு சென்னையில் பல்வேறு பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நட்சத்திர அந்தஸ்து பெற்ற கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாழடைந்து செடி கொடிகளாக இருந்த பூங்காக்கள், ஜல்லி மற்றும் மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு திடல்கள் சிதலமடைந்திருந்த பழைய கட்டிடங்கள் கேட்பாரற்று இருந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் இவை அனைத்தும் இன்று கண்ணை கவரும் பூங்காக்களாகவும், விளையாட்டு திடல்களாகவும், மாணவர்கள் பயிலும் படைப்பகங்களாகவும், அரசு அலுவலகங்களாகவும் மாறி உள்ளன.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ம் ஆண்டு வில்லிவாக்கம் மற்றும் மறு சீரமைக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டது. 2011, 2016, 2021 என மூன்று தேர்தல்களை இந்த தொகுதி கண்டுள்ளது. மூன்று தேர்தல்களிலும் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை போராடி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். தற்போது, முதல்வர் ஆனதும் 20 ஆண்டுகளில் காண வேண்டிய வளர்ச்சியை தற்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கண்டுள்ளது. இதற்கு, அப்பகுதியில் உள்ள பூங்காக்களும், அரசு கட்டிடங்களும், விளையாட்டு திடல்களுமே சாட்சியாக பிரதிபலிக்கின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ண மீன்கள் சந்தை கொண்ட பகுதியாக இருந்த கொளத்தூரில் வண்ண மீன்களுக்கு என்று தனியாக பிரமாண்ட வண்ண மீன் பண்ணை தற்போது கட்டித் தரப்பட்டுள்ளது.
இதேபோன்று, பல்வேறு இடங்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்த குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதனை சீர்செய்து மக்கள் தினமும் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் குளங்களுடன் சேர்ந்த பூங்காக்களை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், கொளத்தூரில் முதல் முதலில் கொளத்தூர் எஸ்ஆர்பி காலனி, 8வது தெருவில் உள்ள ஹரிதாஸ் குளம் தயார் செய்யப்பட்டது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் ஹரிதாஸ் குளம் முழுவதுமாக தயார் செய்யப்பட்டது. குளத்தை சுற்றிலும் கண்ணாடி சுவர்கள் அமைக்கப்பட்டு, அந்த குளத்தில் எந்தவித கழிவு நீரும் கலந்திடாமல் தடுத்து மழைநீர் மட்டும் குளத்தில் சேரும் வகையில் தயார் செய்யப்பட்டு நடைபாதைகள், சிறுவர்கள் விளையாடும் இடம், உடற்பயிற்சி செய்ததற்கான இடம் உள்ளிட்ட அனைத்தும் தயார் செய்யப்பட்டு, குளம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
இது அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. பல பகுதியிலிருந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளும் மக்கள் குவிய தொடங்கினார்கள். இதனையடுத்து, மக்களின் வரவேற்பை அறிந்து பூம்புகார் நகர் 28வது தெருவில் உள்ள திருவீதி அம்மன் கோயில் குளமும் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு, 205 மீட்டர் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் அடங்கிய உடற்பயிற்சிக்கூடம், சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டுக்கூடம், குளத்தை சுற்றிலும் உயர்தர கண்ணாடி தடுப்பு சுவர்கள், குளத்தில் வண்ண மீன்கள் என பிரமாண்டமாக இந்த பூங்காவும் தயார் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இப்போது, மூன்றாவதாக கொளத்தூர் ஜிகேஎம் காலனி 24வது ஏ தெருவில் அமைந்துள்ள ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவை சீர்படுத்தும் பணிகள் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாழடைந்த குளம்போல காட்சியளித்த இந்த இடத்தை பலரும் ஆக்கிரமிப்பு செய்து வாகனம் நிறுத்தும் இடமாகவும், கட்டிட கழிவுகளை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர்.
இதனை, சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2.53 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை முதல்வர் ஆய்வு செய்து, அழகிய பூங்கா மற்றும் குளம் ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் நிதியின் கீழ் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் குளத்தை ஆழபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், புதிய குளக்கரை அமைத்தல் 460 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை மற்றும் 500 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் இங்கு இறகு பந்தாட்ட மைதானம், யோகா மேடை, செயற்கை நீரருவி, மின் வசதி, கழிவறைகள் பசுமை வளர்க்கும் செடிகள், மரங்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகிய பல்வேறு வசதிகளோடு மொத்தம் ரூ.4.36 கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டு, சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதன் மூலம் ஜிகேஎம் காலனி, பெரியார் நகர், ஜவகர் நகர், அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 30 பூங்காக்கள் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை, பொதுமக்கள் அதிகளவில் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் பூங்காக்களை காண முடியும். ஆனால், குளத்துடன் சேர்ந்த ரம்யமான பூங்காக்களை காண்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில், முதல்வரின் தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணா நகர், தி.நகர் போன்ற பகுதிகளுக்கு சவால் விடும் வகையில் தற்போது பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள் என கட்டி முடிக்கப்பட்டு ஒவ்வொன்றாக திறப்பு விழா கண்டு வருகிறது. மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா என முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செயற்பொறியாளர் நெகிழ்ச்சி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திருவிக நகர் மண்டலத்தில் வருகிறது. அந்த வகையில், திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன், 7 ஆண்டுகளாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் கூறுகையில்; கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் பகுதி எப்படி இருந்தது என அப்பகுதி மக்களுக்கு தெரியும். ஆனால், தற்போது எப்படி உள்ளது என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு விஷயமும் இந்த சட்டமன்ற தொகுதியில் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவது மிகப்பெரிய பிரமாண்டமான குளத்துடன் கூடிய பூங்கா கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் எண்ணற்ற பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், முதல்வர் படைப்பகம், கால்பந்தாட்ட மைதானம், டென்னிஸ் கோட், இறகு பந்தாட்ட மைதானம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
தனியார் விளையாட்டு மைதானங்களுக்கு சென்று மாணவர்கள் விளையாட வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். அந்த நிலைமை வரக்கூடாது என்பதற்காக மாணவர்களின் விளையாட்டிற்காக பல விஷயங்கள் இந்த தொகுதியில் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எந்நாளும் என்னால் மறக்க இயலாமல் பணி ஓய்வு பெறுகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சவால் நிறைந்த பூங்கா
தற்போது கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டுள்ள ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா கிடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இப்பகுதியை சேர்ந்த பலரும் இந்த இடத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த காரணத்தால் அவர்களை நீதிமன்ற அனுமதியோடு அகற்றுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இருந்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, ஒவ்வொரு பிரச்னைகளையும் கலைந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்த குளத்தை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக அர்ப்பணித்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு நனவாகி உள்ளது.