திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக்கில் சென்ற நகை வியாபாரியை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன் கையில் வெட்டிவிட்டு ஒரு கிலோ தங்கம், 5 லட்ச ரூபாய் கொள்ளையடித்து தப்பிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுசம்பந்தமாக 4 பேரை தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் தேஜாராம். இவரது மகன் சேஷாராம் (25). இவர் சென்னையில் தங்க நகைகளை செய்து சென்னை உள்பட பல பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்துவருகின்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட தங்க நகைகளுடன் பைக்கில் சென்றுள்ளார்.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் 100 கிராம் தங்க நகைகளை விற்பனை செய்துவிட்டு நேற்று மாலை பைக்கில் சென்னைக்கு திரும்பியுள்ளார். திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொழுவூர் சுடுகாடு அருகே வந்தபோது பின்னால் 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் சேஷாராமை சுற்றிவளைத்து பலமாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது இடது கையில் கத்தியால் வெட்டியபோது சேஷாராம் நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதையடுத்து அவரது பைக்கில் வைத்திருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இதன்பிறகு அவ்வழியாக வந்த சிலர், சேஷாராமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக சேஷாராம் கொடுத்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர். செவ்வாப்பேட்டை அடுத்த வெள்ளக்குளம் பகுதியில் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (21) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட முக்கிய கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். இதன்பிறகு கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளிகள் 4 பேரை பிடிக்க உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.