ம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு சென்னை நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. சென்னையில் ஒரு காலத்தில் எழும்பூர் ரயில் நிலையம் தான் மையப்பகுதியாக இருந்தது. எப்போது ஓஎம்ஆர் சாலையில் ஐடி நிறுவனங்கள்அனைத்தும் குவியத் தொடங்கியதோ விமான நிலையம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை எப்போது போடப்பட்டதோ அப்போது முதல் ஏற்பட்ட தென்சென்னையின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் ஏற்படாத அசுர வளர்ச்சியாகும். திருவான்மியூர் தொடங்கி மகாபலிபுரம் வரை உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் ரயில் ஏறுவதற்கு தாம்பரம் தான் வருகிறார்கள். தாம்பரத்தில் இருந்தே வெளியூர்களுக்கு செல்கிறார்கள். இதனால் தாம்பரமும் மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. குறிப்பாக கிளாம்பாக்கம் வந்த பின்னர் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. தாம்பரத்தில் தான் பலர் ரயிலில் ஏறியும் இறங்கியும் வருகிறார்கள். சென்னையின் நுழைவு வாயிலாக இருந்த தாம்பரம் இப்போது சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதால். பயணிகள் தங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல இங்கிருந்தே பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை கடந்தே வாகனங்கள் அனைத்தும் செல்ல வேண்டும். இப்படி அசுர வளர்ச்சியை அடைந்துள்ள தாம்பரத்தில் சாலை வசதிகள் என்பது கேள்வி குறியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம் கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தாம்பரம் பல்லாவரம் பம்மல் செம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும் சிட்லப்பாக்கம் மாதம்பாக்கம் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகராட்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 70 வார்டுகளை உள்ளடக்கிய 5 மண்டலங்களாக தாம்பரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
சென்னைக்கு அடுத்து சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மிக முக்கிய மாநகராட்சியாக தாம்பரம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்றவாறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 7152 சாலைகள் 980 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளாக ஜிஎஸ்டி சாலை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் அகரம் தென் பிரதான சாலை தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலை பல்லாவரம் குன்றத்தூர் பிரதான சாலை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் உள்ளிட்ட பிரதான சாலைகள் உள்ளது.இதில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பெரும்பாலான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் பெருங்களத்துரை கடந்து தாம்பரம் வழியாக தான் சென்னைக்குள் வந்து செல்கின்றது.
அதேபோன்று தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலையை பயன்படுத்தி லட்சுமிபுரம் முடிச்சூர் மணிமங்கலம் மண்ணிவாக்கம் படைப்பை வழியாக ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தாம்பரம் தர்காஸ் பிரதான சாலை வழியாக வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை தர்காஸ் சோமங்கலம் நடுவீரப்பட்டு எருமையூர் பழந்தண்டலம் குன்றத்தூர் மாங்காடு பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் என பல்வேறு பகுதிகளுக்கும் தாம்பரம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.அதேபோன்று பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக தான் வேளச்சேரி துரைப்பாக்கம் ஈசிஆர் ஓஎம்ஆர் மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும் பல்லாவரம் குன்றத்தூர் பிரதான சாலையை பயன்படுத்தி பம்மல் அனகாபுத்தூர் குன்றத்தூர் மாங்காடு போரூர் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும் சேலையூர் அகரம் தென் பிரதான சாலை வழியாக திருவஞ்சேரி மப்பேடு அகரம் தென் வேங்கைவாசல் மதுரபாக்கம் சித்தாலப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.
மேலும் கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர் கேம்ப் ரோடு செம்பாக்கம் சந்தோஷபுரம் மேடவாக்கம் பள்ளிக்கரணை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளுக்கும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளை பயன்படுத்தி தான் தினமும் லட்சக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலைகளில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தும் குண்டும் குழியுமாக உள்ளன. மேலும் சில இடங்களில் குறுகிய நிலையிலும் சில பகுதிகளில் சரியான திட்டமிடுதல் இல்லாமல் சாலை அமைத்ததாலும் சாலையோர ஆக்கிரமிப்புகளாலும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.அதுமட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் சிஎன்ஜி பைப்லைன் அமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாதாரணமாக சுமார் 5 நிமிடத்தில் கடந்து செல்ல வேண்டிய பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் அரை மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காட்டி வருகின்றனர்.மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு சாலைகளில் தேங்கும் மழைநீர் சேதமடைந்த சாலைகளை மேலும் மோசமாக்குகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சாலைகளில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.பாதசாரிகள் சாலைகளை கடக்கும்போது பள்ளங்களில் விழுந்து காயமடையும் அபாயமும் உள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ஆபத்திற்கு அதிகம் உள்ளாகிறார்கள்.
அதிலும் குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலை ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் முதல் பெருங்களத்தூர் வரை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் கிழக்கு தாம்பரம் முதல் செம்பாக்கம் வரை பல்லாவரம் குன்றத்தூர் பிரதான சாலை பம்மல் முதல் அனகாபுத்தூர் வரை தாம்பரம் தர்காஸ் பிரதான சாலை காந்தி ரோடு முதல் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால் தினந்தோறும் மிகவும் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. இவ்வாறு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போலீசாரும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்றும் சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலேயே உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி சார்பில் ஒருபுறம் சாலைகளில் பேட்ச் ஒர்க் மற்றும் முழுமையாக சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் மற்றொருபுறம் பாதாள சாக்கடை மற்றும் சிஎன்ஜி பைப்லைன் அமைக்கும் பணிகளுக்கு என சாலைகளில் ஆங்காங்கே மீண்டும் மீண்டும் பள்ளங்கள் தோண்டப்பட்டு தான் வருகிறது.இவ்வாறு ஒருபுறம் சாலைகள் சீரமைக்கப்பட்டாலும் பேட்ஜ் ஒர்க் செய்யும் பணிகள் நடந்தாலும் அடுத்த சில நாட்களில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படுவதால் சாலைகள் மீண்டும் சேதடைந்தே காணப்படுகிறது. இதனால் தான் தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சேதமடைந்த குண்டும் குழியுமான சாலைகளுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.
மக்கள் வரிப்பணம் வீணடிப்பு
* சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியாக உருவான பின்பு பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகள் பராமரிப்பு என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மாநகராட்சியாக தாம்பரம் உருவெடுத்து வருகிறது. சென்னையின் நுழைவு வாயிலாகவும் உள்ளதால் வாழ்வாதாரத்தை தேடி குடியேறுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தாம்பரம் பகுதியில் வசிக்கும் மக்கள் வேலைக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். இப்படி எல்லா வகையிலும் தாம்பரம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் சாலைகளின் பராமரிப்பு பணிகளில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்று தான் கூற வேண்டும். சீரமைப்பு பணிகள் தாமதமாக நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சாலைகளில் உள்ள பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலையும் தொடர்கதையாகி வருகிறது. எனவே தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்துள்ள சாலைகளை மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும். புதிதாக போடப்படும் சாலைகளில் மீண்டும் பள்ளம் தோண்டினாலும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் சாலைகளை தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது. எனவே அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.