ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து பணிமனை பகுதியில் நாகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சீரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் குருக்கள் குமார் அய்யர் தினமும் அம்மனுக்கு பூஜை செய்து வருகின்றார். நேற்று வழக்கம்போல் பூஜை செய்வதற்கு குருக்கள் வந்தபோது நாகவல்லி அம்மனின் கருவறையில் சுமார் 6 அடி நீளம் உள்ள நல்லபாம்பு படுத்திருப்பது பார்த்து பரவசம் அடைந்தார். அந்த பாம்பை விரட்ட முயற்சித்தபோது அது அம்மன் சிலையை சுற்றிக்கொண்டு அங்கேயே இருந்தது.
இதையடுத்து குருக்கள் கருவறையின் கிரில் கேட்டை பூட்டியபோது சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள், ‘’ஏன் கோயிலை பூட்டுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளனர். “அம்மன் கருவறையில் நல்லபாம்பு உள்ளது. இதனால்தான் பூட்டியுள்ளேன்’’ என்றார். இதையடுத்து இந்த தகவல் பரவியதையடுத்து ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து கருவறையில் அமர்ந்திருந்த பாம்பை கையெடுத்து கும்பிட்டு பக்தி கோஷங்களை எழுப்பினர்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிப்காட் தீயணைப்பு துறையினர் நேற்றிரவு 9 மணியளவில் வந்து கோயில் கருவறையில் இருந்த பாம்பை பிடித்து பின்னர் ஒரு பையில் போட்டு கொண்டுசென்று வனப்பகுதியில் விட்டனர்.